Saturday 25 July 2020

கடல்புறா பாகம் எட்டு

பிறகு என் பின்னாலிருந்து எழும் கூக்குரல்களை கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன். என்னோடு வந்தவர்கள் எவரையுமே காணவில்லை. புகை என்னை சூழ்ந்து பார்வையை மறைத்திருந்தது. பிறகு கால்பழக்கத்தில் படிகளில் அடியெடுத்துவைத்து பாய்ந்து ஏறி மேல் தளத்திற்கு வந்து நின்றேன். என்னோடு வந்தவர்கள் ஏற்கனவே அங்கே வந்து நின்றவாறுதான் என்னை நோக்கி கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். 

கீழே இப்போது தலைமை அதிகாரியும் தலைமை பொறியாளரும் மட்டும் தான் இருந்தனர். அவர்களும் எதிர்பாராமல் எழுந்த தீயினால் சற்று அதிர்ந்து சுதாரித்து அதே தளத்தின் விளிம்புக்கு பின்னகர்ந்து எங்களை பார்த்து ஏதோ சைகை செய்தனர். கப்பலில் சங்கேத மொழிகளும் சைகை மொழிகளும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும். புதியவனான எனக்கு அதன் அர்த்தங்கள் என்னவென்று அப்போது பிடிபடவில்லை.  அவர்களின் கட்டளையில்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது. தீ கட்டுக்குள் இருக்கும்போதே துரித நடவடிக்கை வேண்டும். இல்லையெனில் கட்டற்று எழும் தீ கண்ணிமைக்கும் நொடிகளுக்குள் பெருகி மொத்தமாக அழித்துவிடும். 


பதட்டத்தில் கையிலிருந்த ரேடியோவை அழுத்தி, "தீ..தீ.." என்று எவருக்கு உரைக்கிறேன் என அறியாமலேயே கூச்சலிட்டேன். நான் கூச்சலிட்டது இந்நேரம் நேவிகேசன் பிரிட்ஜில் இருந்த கேப்டனுக்கு ஒலித்திருக்கும். அவரும் பதிலுக்கு ஏதோ சொல்ல ஜெனரேட்டர் எழுப்பும் இறைச்சலில்  என்னசொல்கிறார் என தெளிவாக விளங்கமுடியவில்லை. என்னோடு நின்றவர்கள் தலைமை அதிகாரியின் கட்டளையை உணர்ந்து புகைக்கு ஊடாக அங்குமிங்கும் ஓடினார்கள்.  ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தீயணைப்பான்களை ஏந்திக்கொண்டு தீயை நோக்கி பிடித்தவாறு செயல்பட தயாராக இருந்தனர். தலைமை அதிகாரி மீண்டும் அவர்களை பார்த்து ஏதோ சைகை செய்ய படிகளில் இறங்கியும் மேலே நின்றவாறும் மற்றும் ஒருவர் கீழே இறங்கிக்கொண்டும் என அனைவரும் ஒருசேர தீயணைக்கும் கருவிகளை இயக்கினர். 

ஒன்றிலிருந்து புகைபோன்று தூள்செய்யப்பட்ட ரசாயனமும் மற்றொன்றிலிருந்து சோப்புநுரை போன்ற நீர்க்கலவையும் என பலவாறான பொருட்கள் தீயணைப்பான்களிலிருந்து ஒருசேர வெளியேறி பாய்ந்து தீயின் மீது விழுந்து மூடத்தொடங்கின. சில நொடிகள்வரை எதிர்த்து எழுந்துநின்ற தீ மிகமெல்ல தன் விசையை இழந்து தாழ்ந்து சென்றது. பிறகு தன் செஞ்சிறகை ஒடுக்கி முயங்கி ஒடுங்கி அமரத்தொடங்கியது. ஆனால் முன்பைவிட இப்போது பலமடங்கு  கட்டுக்கடங்கா கரும்புகையை வெளியேற்றி தன் இருப்பின் தீவிரத்தை அறிவித்தது. 

இருளின் கருமையென எழுந்து பரவி சூழ்ந்த புகைக்குள் பிரதான இயந்திரமும் அங்கிருந்தவர்களும் மறைந்து அந்த இடமே வெறும்புகைதானோ என்பது போல தோற்றம் கொண்டது. 

அந்த நேரத்தில் அங்கே நான் ஒருவன் மட்டும்தான் அந்த சடங்குகள் எதிலும் கலந்துகொள்ளாமல் கேப்டன் என்ன சொல்கிறார் என விளங்க முயற்சித்தவாறு ரேடியோவின் ஒலிப்பானை காதுகளோடு சேர்த்து பிடித்துக்கொண்டு ஒரு தேர்ந்த சாகச சினிமாவிற்கு நிகரான காட்சிகளுக்கு சாட்சியாக நின்றிருந்தேன். 

திடீரென கைகளில் ஏதோ ஈரம் பட்டது போன்று உணர்வு. காயம்பட்டு வலியில் துவண்டு கொண்டுடிருந்த விரலில் தீண்டிய ஈரத்தால் மொத்த உடலும் சிலிர்த்து எழுந்தது. அத்தனை நேரத்தில் அப்போதுதான் கட்டைவிரலில் காயம்பட்டிருப்பது ஞாபகத்தில் வந்தது.

தீயிலும் புகையிலும் வறண்டு எரிச்சல் கொண்டிருந்த முகம் குளுமையை உணர்ந்து மெல்ல மலர்ச்சியடைந்தது.  முகத்தில் படர்ந்த ஈரத்தின் குளுமை மூச்சில் கலந்து நாசியை தீண்டியது. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து அதை நெஞ்சில் வாங்கிக்கொண்டேன்.  பூமழை போன்ற அந்த துளிச்சிதறலில் மெல்ல நனைய ஆரம்பித்திருந்தேன். புகைப்படலம் போல கண்களில் படர்ந்த நீர்த்துகள்கள் பார்வையை மறைத்தது. கண்களை கசக்கி பார்வைதெளிந்து கைகளை ஏந்தி மேலே பார்த்தேன். 

தலைக்கு சற்று மேலேதான் என பல்வேறு நிறங்களில் வண்ணங்களாக தோன்றி உருக்கொண்டிருந்தன. ஒன்றோடொன்று அடுக்கி விரித்த வண்ணங்கள் அரங்கின் இரு எல்லைகளுக்குமாக நீண்டு சென்றன. மூடிய அறையில் அவை எப்படி உள்ளே நுழைந்திருக்கமுடியும். விந்தையாக இருந்தது. பிறகு அந்த வண்ணங்கள் கசிந்து சாரலாக வீசித்தொடங்கியது. அருவிக்கு சமீபத்தில் நின்றால் உணர்வோமே அதைப்போல அதன் குளுமையிருந்தது. அகம் அதிர்ந்து எழுந்தது. கண்களில் ஒளி நிரம்பியது. மனதில் ஒரு கிளர்ச்சி. அத்தனை நேரம் இல்லாத ஒரு இதம்.

எட்டி கைகளால் துழாவி அந்த வண்ணங்களின் ஒழுங்கை கலைக்க முயன்றேன். பார்வைக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அவை தொட முயலும்போது தூரத்தில் சென்று நின்றுகொண்டன. என்னை நிறுத்தி அதன் உருவகத்தை துலங்க முயன்றேன். மெல்ல மெல்ல மலர்ந்து வந்து தரிசனம் தந்தது. அருகிலா அல்லது தூரத்திலா என தெரியவில்லை. ஆனால் சாரலுக்கு நடுவே நன்கு துலங்கி நின்றது. கைக்கெட்டும் தூரத்தில் என்மேலே ஒரு வானவில். நான் ஏட்டிப்பிடிக்க முயன்று முயன்று தோற்ற வண்ணவெளி. அங்கு நடப்பதையே மறந்து அதன் காட்சியில் நிலைகுத்தியிருந்தேன்.

உதிர்ந்த மெல்லிய நீர்த்துகள்கள் என் விரல்களை தொட்டு மலர்த்தி பனிப்பொழிவை போல உடலை வருடி கீழே நழுவிச்சென்றன.  கண்களை கசக்கி தெளிந்த பார்வையால் நோக்கும்போது அவை அறையெங்கும் பரவி அணைந்து கொண்டிருந்த தீயின் மேலே இறங்கிக்கொண்டிருந்தன. 

மிகமிக மெல்லிய நீர்த்துளிகள். துளிகள் என்றுகூட சொல்லமுடியாத அளவிற்கு மிகமிக நுண்ணிய துகள்கள். தனித்தனியே பிரித்தரியமுடியாத மழைமேகத்தையும் மழைத்துளியையும் போல  இதில் நீர் எது காற்று எது என பிரித்தறியமுடியவில்லை.  தொடுகையால் மட்டுமே உணர முடிந்தது.

இது இயந்திர அறையில் தீ ஏற்படும்போது அது அணைப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் ஹைபர் மிஸ்ட் (hyper mist) எனப்படும் அமைப்பு. அரங்கின் உச்சியில் குளியலறையின் நீர்சொட்டி போல இருக்கும் இதிலிருந்து உயரழுத்ததில் நீரும் காற்றும் பீச்சியடிக்கப்பட்டு பிறகு சாரல் போல புகை போல மிகநுண்ணிய நூர்த்துகள்கள் அரங்கமெங்கும் பரவி வெப்பத்தை கட்டுப்படுத்தி தீயை அணைத்து வெப்பத்தை கட்டுப்படுத்தும்.  இந்த அமைப்பைதான் யாரோ ஒருவர் இப்போது இயக்கியுள்ளார். இதிலிருந்து வெளிவந்த சாரலில்தான் தீயோ அல்லது விளக்கொளியோ பட்டு வானவில்லாக வெளிப்பட்டு எனக்கு காட்சி தந்து கொண்டிருந்தது. 

ஆனால் இது எண்ணெயில் பற்றிய தீ. எரிந்து கொண்டிருக்கும் எண்ணெயில் நீர் விழும்போது அது வெடித்துச்சிதறும்.  வெடித்துச்சிதறும் இந்த தீப்பிழம்புகள் பிறபகுதிகளுக்கும் பரவி தீயை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆனால் இவை மிகநுண்ணிய நீர்த்துகளாதலால் அதுபோல நிகழ வாய்ப்பு குறைவு தான். வேண்டுமானால் இயந்திரங்களை குளிர்விக்க மட்டும் உதவலாம்.


புகைக்கு ஊடாக பார்த்தேன். தீ மெல்ல மெல்ல அணைந்து தன்னை முற்றிலும் இழந்திருந்தது. அதேபோல அனைவரது கைகளிலும் இருந்த தீயணைக்கும் கருவிகளும் காலியாகி இறுதி மூச்சையும் இழந்து அமைதியாகியிருந்தன. அறையெங்கும் எஞ்சி நின்ற புகைக்கு மேலாக அந்த நீர்த்துகள்கள் வீழ்ந்துகொண்டிருந்தன. எல்லாம் அமைதியாகியிருந்தது. ஜெனரேட்டர் இயங்கும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. 

இப்போது காற்றுவெளியேற்றியை (ventilation system) இயக்கி முதலில் அந்த புகையை வெளியேற்ற வேண்டும். பிறகு இயந்திரம் தானாகவே குளிர்வதற்கான நேரத்தை அளிக்கவேண்டும். அப்போது தான் இயந்திரத்தை நெருங்கி எங்கே பழுதாகியிருக்கிறது என சோதனை செய்ய முடியும். அதன் பிறகு துரிதமாக செயல்பட்டு பழுதை நீக்கி இயந்திரத்தை இயங்கச் செய்யவேண்டும். 

இன்னேரம் வெளியே புயலும் மழையும் வடக்கே தென்னாப்பிரிக்க கரையை நோக்கி எழுந்துசெல்லும் பேரலைகளும் கப்பலை அடித்து வீழ்த்தி பாறைகளின் பக்கம் இழுத்துச் சென்றுகொண்டிருக்கும். அதன் வீரியம் மேலே நேவிகேசன் ப்ரிட்ஜில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் இப்போது பதட்டத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கீழே கப்பலின் அடிப்பகுதியில் இருக்கும் எங்களுக்கு பெரிதாக எதுவும் தெரிய வாய்ப்பில்லை. 

முழுவதும் அடைக்கப்பட்டு நீருக்குள் மூழ்கியிருக்கும் கப்பலின் அடிப்பகுதியின் ஒரு பகுதி தான் இந்த இயந்திர அறை. கப்பல் புயலில் ஆடும் போது அதன் உயர்ந்த பகுதியில் தான் அதிகளவில் ஆட்டம் இருக்கும். இயந்திர அறை இருக்கும் தாழ்ந்த அடிப்பகுதியில் அந்தளவிற்கு ஆட்டம் இருக்காது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல தான். தலை தான் அதிகம் ஆடும். அப்பகுதி நிலையாக இருக்கும். அதுபோல தான். அப்படியிருந்தும் கூட கீழே அடியில் இருந்த எங்களுக்கு கப்பலின் ஆட்டத்தை நன்றாகவே உணரமுடிந்தது. எங்கள் பகுதியும் நன்றாகவே அங்கும் இங்கும் சாய்ந்து சாய்ந்து எழுந்து ஆடிக்கொண்டிருந்தது. எதையாவது கைகளில் பற்றாமல் நிலையாக  ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. 

என்னுடைய உடையில் பொறுத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன்மானி சமிக்கை கொடுத்து பீ..ப். பீ..ப். என மெல்ல எச்சரிக்கை ஒலியை எழுப்ப ஆரம்பித்திருந்ததை காதுகள் மெதுவாக கேட்டன. சட்டைப்பைக்குள் கையை விட்டு எடுத்துப்பார்த்தேன். அறையின் ஆக்ஸிஜன் அளவு குறைந்திருப்பதை உணரமுடிந்தது. எந்தவொரு மூடப்பட்ட அறையிலும் குறைந்தது 19.5 சதவீதம் ஆக்ஸிஜன் இருக்கவேண்டும். அதைவிட கீழேசென்றால் ஆக்ஸிஜன்மானி ஒலியெழுப்பி எச்சரிக்கை கொடுக்க தொடங்கிவிடும். நீர்த்துளி படர்ந்திருந்த அதன் திரையை துடைத்து கூர்ந்து பார்த்தேன். அந்த அறையில் 18 சதவீதம் தான் ஆக்ஸிஜன் இருப்பதாக காட்டியது. சற்று முன்புவரை பற்றியெரிந்து கொண்டிருந்த தீ இயந்திரத்தின் கச்சாஎண்ணெய் கழிவுகளிலிருந்து தான் எரிந்துகொண்டிருந்தது. கச்சாஎண்ணெய் எரியும்போது அதிகளவில் சல்ஃபர் டையாக்ஸைடையும் கார்பன் மோனாக்ஸைடும் வெளியேற்றும். இவை எடைமிகு வாயுக்கள். இவை அந்த அறை முழுதும் பரவி எடையில் குறைந்த ஆக்ஸிஜனை வெளியேற்றி அதன் இடத்தை பிடித்துக்கொள்ளும் தன்மையுடையவை. புகையாக பரவிய அந்த வாயுக்களால் அங்கிருந்த ஆக்ஸிஜன் அதிகளவில் வெளியேற்றப்பட்டிருக்கும். மீதமிருந்த ஆக்ஸிஜனின் பெரும்பகுதியும் தீயில் எரிந்திருக்கும்.


நாங்கள் எல்லோரும் இப்போது உடனே அஙகிருந்து வெளியேற வேண்டும் அல்லது புகையை வெளியேற்றி வெளிக்காற்றை உள்ளே கொண்டுவரவேண்டும்.  இல்லையெனில் இன்னும் கொஞ்சநேரத்தில் மயக்கமடைய தொடங்கிவிடுவோம்.  நுரையீரலை அதிகளவில் கரியமில வாயு நிரப்பத்தொடங்கியிருந்ததை எனக்கு நன்றாகவே உணரமுடிந்தது. லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. 


இதுபோன்ற நேரங்களில் அங்கிருந்து தப்பித்துச்செல்வதற்காக ஒவ்வொரு தளத்திலும் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டரும் அதோடு பொருத்தப்பட்ட முகக்கவசமும் இருக்கும். அதை எடுத்து முகத்தில் அணிந்துகொண்டால் அதிலிருந்து 12 நிமிடங்கள் வரை தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதற்குள் அங்கிருந்து வெளியேறி தப்பித்துவிடலாம். ஏற்கனேவே மயக்கமடைந்திருப்பவர்களையும் அதைப்பயன்படுத்தி தப்பிக்க உதவலாம்.  அவசரத்திற்கு தப்பித்து வேளியேற மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டுமேயொழிய அதை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் தீயை அணைக்கவோ வேறு அவசரகால பணிகளுக்கோ முயலக்கூடாது. கப்பலின் சட்டவிதிகளில் அதுவும் ஒன்று. 

முதல் சுற்று மதுவுக்கு பிறகு வருமே. அதுபோன்ற ஒரு மெல்லிய மயக்கத்தை உணர்ந்து தொண்டையை கனைத்து இருமிக்கொண்டு அங்கிருப்பவர்களை நோக்கி ஆக்ஸிஜன்மானியை உயர்த்திப்பிடித்து ஆபத்திலிருப்பதை குறிப்பால் உணர்த்தினேன். உடனே அருகில் நின்ற மூன்றாம் பொறியாளர் அங்கிருந்து இரண்டு தளங்கள் மேலிருந்த இயந்திர கட்டுப்பாட்டு அறைக்குச் ஓடிச்சென்று குளிரூட்டியை  இயக்கினார். இயந்திர அறை இருந்த அரங்கம் எங்கும் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் வழியாக குளிரூட்டப்பட்ட காற்று வரத்தொடங்கியது. நான் ஒரு குழாய்க்கு கீழே சென்று நின்று ஆழமாக அதன் காற்றை உள்ளிழுத்து நெஞ்சில் நிரப்பிக்கொண்டேன். 

தீ எவ்வாறு உருவாகிறது என்பதை எல்லோருக்கும் புரியும்படி ஒரு எளிய முக்கோணத்தில் விளக்கலாம். எரிபெருள், நெருப்பு மற்றும் ஆக்ஸிஜன் என இந்த மூன்றையும் ஒரு முக்கோணத்தின் பக்கத்திற்கு ஒன்றாக வைத்துக்கொள்ளவேண்டும். இம்மூன்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும் அங்கு தீ க்கு வாய்ப்பில்லை. இப்போது இங்கே பற்றிய தீயை எடுத்துக்கொள்வோம். முதலில் இது எரிபொருளுக்காக கச்சாயெண்ணெயின் கழிவை எடுத்துக்கொண்டது. இரண்டாவது இயந்திரம் ஓடி சூடாகி வெப்பமேறிய பகுதியிலிருந்து வெளிவந்த நெருப்பை பயன்படுத்திக்கொண்டது. கடைசியில் மூன்றாவதாக காற்றில் கலந்திருந்த ஆக்ஸிஜனையும் எடுத்துக்கொண்டுவிட்டது. இப்படித்தான் ஒவ்வொரு தீயும் உருவாகிறது.

கப்பலில் தீ பற்றும்போது முதலில் அந்த இடத்தை மூடி தனிமைப்படுத்தி ஆக்ஸிஜன் உள்ளே நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியிலிருந்து ஆக்ஸிஜன் உள்ளே வர வழியில்லையென்றால் அங்கிருக்கும் ஆக்ஸிஜனை மட்டும் எரிக்கும் தீ சிறிதுநேரத்தில் தானாகவே அடங்கிவிடும். அதன் பொருட்டு தான் இங்கு இப்போது தீ பற்றியபோது வெளிக்காற்று உள்ளே வராமல் இருப்பதற்காக சற்றுமுன்பு அனைத்து திறப்புகளையும் மூடி அறையை தனிமைப்படுத்தியுள்ளனர். அதுதான் ஆக்ஸிஜன் குறைந்ததற்கு காரணம். 


இப்போது மூடிய திறப்புகளை திறந்துவிட்ட பிறகு அதன் வழியே உள்ளே வந்த குளிர்க்காற்று அரங்கம் எங்கும் பரவத் தொடங்கியிருந்தது.




புகையை வெளியேற்றும் காற்றுவெளியேற்றியை இயங்கவைக்க பொறியாளர்கள் ஆயத்தமானார்கள். நீரழுத்த கதவுகளையும் (water tight door), அரங்கின் மேற்கூரையில் இருக்கும் வெளியொளி கதவையும் (skylight door) திறந்தால் சுலபமாக புகையை வெளியேற்றி  வெளியேயிருக்கும் இயற்கை காற்றை உள்ளே கொண்டுவந்துவிடலாம். ஆனால் இந்த நேரத்தில் எந்தக் கதவையுமே திறக்கமுடியாது. வெளியே வீசும் புயலில் எழும் அலைகளும், விடாமல் பெய்யும் பெருமழையும் சுலபமாக கதவுகளின் வழியே ஊடுருவி உள்ளே வந்துவிடும். எனவே இப்போது இருக்கும் ஒரேவழி காற்றுவெளியேற்றி மட்டும்தான். 

ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த காற்று வெளியேற்றி செயல்படத்தொடங்கி அறையில் நிரம்பிய  புகையை மெல்ல மெல்ல உறிஞ்சி வெளியே அனுப்ப தொடங்கியது. அதேநேரம் குளிரூட்டிவழியாக உள்ளே வந்த வெளிக்காற்றும் அறை எங்கும் பரவத் தொடங்க மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்ப ஆரம்பித்தோம். 

நான் நின்ற தளத்திற்கு கீழே தான் பிரதான இயந்திரம் இருந்த தளம். இயந்திரத்தின் சற்று அருகே நின்றுகொண்டிருந்த தலைமை அதிகாரியும் தலைமை பொறியாளரும் வெளியே கப்பல் எதிர்கொண்டிருக்கும் ஆபத்தையும் அதன்பொருட்டு உடனே பழுதை சரிசெய்து இயந்திரத்தை இயக்குவதின் அவசரத்தையும் விவாதித்துக் கொண்ருந்தனர். மற்ற பணியாளர்களும் மெல்ல மெல்ல கீழே இறங்கி அவர்கள் அருகே செல்லத் தொடங்கினர்.

அப்போது ஏதோ இறைச்சல் எழுந்ததாக உணர்ந்து தோளில் தொங்கிக்கொண்டிருந்த என் ரேடியோவை கவனித்தேன். வெகுநேரமாகவே கேப்டனின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்திருக்கிறது. இறைச்சலிலும் பதட்டத்திலும் இவ்வளவு நேரமாக நான் அதை கவனிக்கவில்லை. ரேடியோவை எடுத்து பேசுவதற்கான பொத்தானை அழுத்தி, "சார்.. சார்.. கேட்கிறதா கேட்கிறதா.. நான் பேசுவது கேட்கிறதா.." என்று சத்தமாக கேட்டேன். அடுத்த முனையிலிருந்து பதிலுக்கு இறைச்சல் தான் எழுந்துவந்தது. பாவம் கேப்டனின் சொற்கள் ஒவ்வொன்றும் இயந்திர அறையில் இயங்கிய ஜெனரேட்டரின் இறைச்சலுக்கு பலியாகிப்போனது. கீழே நின்றுகொண்டிருந்த தலைமை அதிகாரியை அழைத்து அவரிடமிருந்த ரேடியோவை சுட்டிக்காட்டி "கேப்டன்.. கேப்டன்.." என்றேன். அவர் அதை சரியாக கவனிக்காமல் மற்றவர்களின் பக்கம் திரும்பி ஏதோ உரக்க பேசிக்கொண்டிருந்தார். 

அவரிடம் தகவலை சொல்லலாம் என கீழ் தளத்திற்கு செல்வதற்காக படிகளில் இறங்கப்போனேன். ஏற்கனவே அரங்கமெங்கும் பரவி கசிந்துகொண்டிருந்த நீர்த்துகள்கள் படிகளிலும் படிந்து என் பூட்ஸ்களை வழுக்கியது. பக்கக் கம்பிகளை பிடித்துக்கொண்டு கவனமாக அடியெடுத்து வைத்து இறங்கப்போனேன். அப்போது பின்னாலிருந்து ஏதோ குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மூன்றாம் பொறியாளர் என்னிடம் வந்து, "இயந்திர கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி அடித்துக்கொண்டிருக்கிறது. கேப்டனாக தான் இருக்கவேண்டும். நீ போய் என்னவென்று பார்" என்றார். அந்த மொத்த இயந்திர அரங்கத்திலேயே அங்கு மட்டும் தான் தொலைபேசி இருக்கிறது. ரேடியோவில் தெளிவாக விளங்காததால் கேப்டன் நேரடியாக இயந்திர கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்திருக்கவேண்டும். 

இயந்திர கட்டுப்பாட்டு அறைக்கு நான் நின்றதிலிருந்து இரண்டு தளங்கள் மேலே ஏறிச்செல்ல வேண்டும். அந்த அரங்கத்தில் மொத்தம் ஐந்து தளங்கள்.  படிகளில் மேலே ஏறுவதற்கு முன்பு திரும்பிப்பார்த்தேன். எனக்கு கீழேயிருந்த தளத்தில் புகை மறைந்து பிரதான இயந்திரம் முழுமையாக காட்சி தந்தது. அப்போது தான் அதை பார்த்தேன். கோவில் கருவறை இருளுக்குள்ளிருந்து துலங்கிவந்த சிவலிங்கத்தை போல காட்சிதந்த பிரதான இயந்திரத்தின் அடியில் ஸ்டார் போர்ட் பக்கத்தில் (வலது) இரு அடி நீளத்தில் வெடித்து பிளவு ஏற்பட்டு உள்ளிருந்த உலோகம் நெருப்பில் பழுத்து இளஞ்சிவப்பு நிறத்தில் சிவந்து ஒளிவீசிக்கொண்டிருந்தது. சிலநொடிகள் வைத்தகண் வாங்காமல் பார்த்துவிட்டு மற்றவர்களை பார்த்தேன். தீவிரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். பிறகு மேலேறிச்சென்றேன்.


"உன்னோடேகூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்"
(யாத்திராகமம் 34:10)


 தொடரும்

Thursday 23 July 2020

கடல்புறா பாகம் ஏழு



மேல்நோக்கியெழுந்த கரும்புகை பக்கவாட்டில் சரிந்து பரவி எங்களை சூழத்தொடங்கியது. அதனூடாக மிகமெல்ல மின்னும் பொன்கீற்று போன்று தோன்றிய தீ எழிலோடு சுடர்கொண்டது. பிறகு  ஆற்றல்கொண்டு விசையோடு தலைக்குமேலே எழுந்து நின்று எரிந்தது. அதன் சிவந்த ஒளிக்கீற்று கண்களை கூசச்செய்தது.

ஒரு கப்பலின் இதயம் என்பது அதன் பிரதான இயந்திரம் (Main engine) தான். காரணம் ஒரு உடலின் உயிர் எப்படி அதன் இதயத்தின் துடிப்பில் உள்ளதோ அதேபோல தான் ஒரு கப்பலின் உயிரும் அதன் இயந்திரத்தின் துடிப்பில் உள்ளது. கப்பலின் இயந்திரங்கள் யாவும் நாட்கணக்கில் வாரக்கணக்கில் தொடர்ந்து நிற்காமல் இயங்கும் சிறப்பு கொண்டிருக்கும். ஒருவாரம் இருவாரம் அல்ல. மாதக்கணக்கில் கூட நிற்காமல் இயங்கும். சீனாவிலிருந்து கிளம்பும் ஒரு கப்பல் பிரேசில் சென்றடைய ஏறக்குறைய 60 நாட்கள் ஆகும். அந்த 60 நாட்களும் அது எந்தவொரு இடத்திலும் ஒரு நிமிடம் கூட நிற்காமல் தொடர்ந்து இயங்கி அத்தனை பெரிய கப்பலையும் முன்செலுத்திக்கொண்டே இருக்கும். 

கப்பலும் அத்தனை நாட்களில் எங்குமே ஒருமுறைகூட நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நான் கப்பல் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருமுறை என் தாத்தா, "நைட்ல எல்லாம் கப்பல எப்படி ஓட்டுவீங்க. அமத்தி போட்டு தூங்கிருவீங்களோ?" என்று கேட்டார். அப்போது சற்றும் எதிர்பாராத அந்த திடீர் கேள்வியில் கொஞ்சம் திடுக்கிட்டு விட்டேன். 

தொடர்ந்து நிற்காமல் ஓடஓட கட்டற்ற ஆற்றலும் வெப்பமும் இயந்திரத்திலிருந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். அதனுள்ளே இருக்கும் மாபெரும் பிஸ்டன்களும் சுழலும் சக்கரங்களும் அதன் பற்களில் மாட்டப்பட்ட சங்கிலிகளும் என பல்வேறுபட்ட உலோகங்களும் தொடர்ந்து நிற்காமல் இயங்கும் போது ஏற்படும் உராய்வின் காரணமாக வெப்பம் பெருகியவண்ணம் இருக்கும். இதன் காரணமாக இயந்திரத்திற்குள்ளே லூப்எண்ணெயும் மசவெண்ணையும் தண்ணீரும் குளிர்விப்பானும் தேவையான நேரத்தில் தொடர்ந்து அளித்து வெப்பத்தை கட்டுப்படுத்தி சமநிலையில் வைத்திருக்க வேண்டும். 

இந்த பிரதான இயந்திரத்தின் (Main Engine) பராமரிப்பு முழுவதும் இரண்டாம் பொறியாளரின் கைகளில் தான் இருக்கும். அதற்கு என்ன ஆனாலும் அவர்தான் முதல் பொறுப்பு. இருபத்திநான்கு மணி நேரமும் அவரின் சிந்தனை முழுதும் அதன் இயக்கம் சார்ந்தேதான் இருக்கும். கப்பலில் ஏறியதிலிருந்து இறங்கும்வரை அவர்களின் இதயம் கூட இயந்திரத்தின் அலைவரிசையோடு இணைந்துதான் துடிக்கும். அவர்களுக்கு இயந்திரத்தின் துடிப்பு நிற்பது என்பது தங்கள் இதயத்தின் துடிப்பு நிற்பதற்குச் சமம். உறக்கத்தில் கூட காதுகள் ரகசியமாக இயந்திரம் இயங்கும் ஒலியை கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும். அவர்கள் அதனோடு அப்படியொரு உறவு கொண்டிருப்பார்கள். 

கப்பலின் தலைவர் கேப்டன் என்றால் இரண்டாம் பொறியாளரை கப்பலின் கடவுள் என்று கூட குறிப்பிடலாம். ஆனால் எப்போதாவது இயந்திரத்தின் செயல்பாடு  இவரின் கட்டுப்பாட்டையும் மீறி செல்லும் நிலைவரும். அப்போது இவரைவிட பெரியகடவுள் உள்ளே வருவார். அவரை பார்த்தவுடன் எவ்வளவு பெரிய இயந்திரமானாலும் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும். அவர் தான் தலைமை பொறியாளர். 

இப்போது கப்பல் மாபெரும் பேரலைகளில் ஏறி இறங்கியபோது ஏற்பட்ட இன்ஜின் ட்ரிப்பில் (Main Engine tripping) வழக்கத்திற்கு மாறான அதீத வேகத்தில் இயங்கிய இயந்திரத்தின் பகுதிகள் உராய்ந்து சூடேறி பழுத்து சிவந்து தீக்கு வழிசெய்திருக்க வேண்டும். 

நானே ஒருமுறை பார்த்திருக்கிறேன். சனிக்கிழமை மாலை நடந்த விருந்தில் நன்றாக குடித்துவிட்டு பணிக்கு சென்ற மூன்றாம் பொறியாளரும் அவரின் துணை பணியாளரான எண்ணெயாளரும் இயந்திர கட்டுப்பாட்டு அறையில் நன்றாக தூங்கிவிட்டனர். சரியான நேரத்தில் மாற்றப்பட வேண்டிய எண்ணெயும், குளிரூட்ட செழுத்தப்படும் தண்ணீரும் இயந்திரத்திற்குள் அளிக்கப்படவில்லை. இயந்திரம் ஓட ஓட சூடாகி சூடாகி பழுத்து சிவந்து வெப்பம் உயர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துவிட்டது. போதையில் மெல்லமெல்ல நிதானித்து எழுந்த பொறியாளர் செயல்படுவதற்குள் அறையில் ஓய்விலிருந்த மற்ற இயந்திர பணியாளர்கள் ஓடிச்சென்று இயந்திரத்தை நிறுத்திவிட்டனர். இல்லையெனில் அன்று பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்.

சரியான நேரத்தில் நிறுத்தவில்லையென்றால் அத்தனை வெப்பத்தில் இயங்கும் இயந்திரம் ஒருகட்டத்தில் பழு தாங்காமல் வெடித்து சிதறிவிடும். அதன் உடைந்த பகுதிகளும் அதனோடு ஒட்டிய எண்ணெயுமாக சேர்ந்து எழும் தீ பல இடங்களுக்கு சிதறி விழுந்து பெரும் நாசத்தை உருவாக்கிவிடும். அதோடு மட்டுமல்லாமல் அதன் பிஸ்டன்கள் நொறுங்கும் பட்சத்தில் அவ்வளவு தான். அதன் பிறகு திரும்ப இயந்திரம் இயங்க வாய்ப்பில்லை. பழுதுபார்க்கும் இடத்திற்கு முழுக்கப்பலையும் கட்டிதான் இழுத்துச்செல்ல வேண்டும். அங்கும் முடிந்தவரை தான் பழுது பார்ப்பார்கள். இயந்திரத்தை திரும்ப செயல்படவே வைக்கமுடியாது என்னும் நிலைவரும்போது மொத்தமாகவே கப்பலை உடைப்பதை தவிர வேறு  வழியில்லை. 

அன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் அபாய மணி காதுக்குள் கத்தியபோது பதறி விழித்துவிடட்டேன். பின்னர் இயந்திரம் நிறுத்தப்பட்டவுடன் எழுந்து இயந்திர அறைக்கு சென்று பார்த்தேன். இருண்ட அரங்கத்தின் உச்சியிலிருந்து பார்க்கும்போது கீழே நெருப்பில் பழுத்து சூடேரிய உலோகம் கனன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அருகில் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதில் ஒருவன் என்னிடம் கண்களால் சைகை செய்தான். இயந்திர கட்டுப்பாட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தேன். பொறியாளருக்கு துணையாக பணியிலிருந்த எண்ணெயாளன் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் எழுந்ததும் அடுத்த துறைமுகத்தில் வீட்டிற்குச் செல்ல தயாராகவேண்டியது தான். விந்தை என்னவென்றால் எல்லோரும் சேர்ந்துதான் குடித்தோம். அவன் மிதமிஞ்சி போய்விட்டான்.
அப்போது துளியளவு எண்ணெய் அந்த உருகி நிற்கும் உலோகத்தில் பட்டிருந்தால் கூட போதும். வெடித்து தீயாக எழுந்திருக்கும். 

இயந்திரத்தை முற்றாக நிறுத்திவிட்டு அது குளுமை அடையும் வரை காத்திருந்தோம். அதற்காக அதில் தண்ணீரை ஊற்றி குளிரவைக்கலாமே என்று கேட்கலாம். அதை விட முட்டாள்தனம் வேறொன்றுமில்லை. பழுக்க காய்ச்சி கனன்று கொண்டிருக்கும் ஒரு உலோகத்தில் தண்ணீர் படும்போது அது அதன் அடிப்படை அமைப்பிலேயே கைவைத்துவிடும். இயந்திரத்தின் ஒவ்வொரு அமைப்பும் மிகமிக நுண்ணிய வார்ப்புகள் கொண்டவை. அளவில் சிறிது மாறினாலும் பொருத்தம் கிடைக்காமல் போய்விடும்.

சிறுவயதில் முதன்முறையாக திருப்புனவாசல் சிவாலயத்திற்கு சென்றிருந்தேன். முகப்பு மண்டபத்தை கடந்து கருவறைக்கு முன்னே நின்று மூலவரை பார்த்த போது முதலில் இருளுக்குள் எதுவுமே புலப்படவில்லை. கருமையேயென காட்சியளித்தது.  வெளிச்சத்திற்கு பழக்கப்பட்ட பார்வை இருளுக்கு பழக சற்று நேரமாகும். மிகமெல்ல துலங்கிவந்த பார்வைக்கு புலப்பட்ட சிவலிங்கத்தின் பிரம்மாண்ட வடிவம் எனக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த கண்களை பொத்திக்கொண்டு ஓவென்று அலறி வீறிட்டு வெளியே ஓடிவந்துவிட்டேன். காரணம் அந்த லிங்கத்தின் பிரம்மாண்டம் அத்தகையது. சிறுவனான நான் முதன்முறையாக அப்போதுதான் அத்தனை பெரிய கருங்கல்லில் செதுக்கப்பட்டு எண்ணெய் பளபளப்பு அடர்ந்து மின்னும் கரும்பரப்பில் பட்டை சாத்தப்பட்ட லிங்க உருவத்தை பார்க்கிறேன். பார்க்க பார்க்க அதன் உருவம் இருளுக்குள் எழுந்து வருவதை கண்ட போது ஏற்பட்ட மிரட்சியில் பயந்து நடுங்கிப்போயிருந்தேன். பிறகு அம்மா வந்து, "நம்ம சாமி தானே. இதுக்கா பயந்து ஓடுற. அம்மா கூட இருக்கேன்ல வாடா." என்று இழுத்துக்கொண்டு சென்றாள். அப்பா சிரித்துக்கொண்டே நின்றிருந்தார். 

அடுத்தமுறை பார்க்கும்போது சற்று பயம் குறைந்து ஆச்சர்யம் மேலோங்க தொடங்கியிருந்தது. அந்த லிங்கத்தின் உயரத்தை விட அதன் அகலம் தான் மிகமிக பிரம்மாண்டமானது.  அப்பாவிடம் கேட்டேன் "இத்தனை பெரிய லிங்கத்தை இந்த சின்ன கதவின் வழியாக எப்படிப்பா உள்ள வச்சிருப்பாங்க". 
அதற்கு அப்பா ,"இந்த  கதவுகளின் வழியாக எல்லாம் இந்த சிலையை உள்ளே கொண்டுசெல்ல முடியாது. இந்த சிலையை முதலில் இங்கு வைத்தபின்பு தான் இதற்கு மேலே கோபுரத்தை கட்டி எழுப்பி நிலையும் கதவுகளும் வைத்தார்கள்" என்றார். 

அது சுந்தர பாண்டியன் கட்டிய கோவில். பாண்டியன் கட்டிடக்கலைப்படி இந்தக் கோவிலில் ராஜகோபுரத்தை விட விமானம் பெரிதாக இருக்கும். அத்தனை பெரிய சுற்றளவுள்ள (உலகிலேயே ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட அதிக சுற்றளவு கொண்ட லிங்கும் இதுதான். இதன் சுற்றளவு 82.5 அடி) லிங்கத்தை கருவறையில் வைத்து தான் அதன் மேலே இத்தனை பெரிய விமானத்தை கட்டியெழுப்பியுள்ளனர். 

இதையெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்றால் கப்பலின் அத்தனை பெரிய பிரதான இயந்திரத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் தான் ஞாபகத்தில் வருவார். ஒரு கப்பலை கட்டும்போது முதலில் அடிப்பகுதியை கட்டி அதற்குள் பிரதான இயந்திரத்தை வைத்தபின்னர் தான் அதன் மேலே மொத்த கப்பலையும் கட்டியெழுப்புவார்கள். முக்கால்வாசி கப்பல்களில் இந்த இயந்திர அறைக்கு மேலே தான் தங்கும் அறைகளும், நேவிகேசன் பிரிட்ஜிம் கொண்ட பிரம்மாண்ட அமைப்பு (ship's super structure) எழுந்து நிற்கும். 

பழுதான இயந்திரத்தை முடிந்தவரை சரிசெய்து மீண்டும் ஓட வைக்க முயற்சி செய்வார்கள். கடைசியில் முடியாத பட்சத்தில் அந்த இயந்திரத்தை வெளியே எடுக்கவேண்டிய நிலைமை வரும் போது மெத்தக் கப்பலையும் வெட்டிதான் அதை வெளியே எடுக்க முடியும். வேறு வழியில்லை. கப்பல் தான் கோவில் என்றால் அதன் கருவறையில் உள்ள மூலவர் தான் பிரதான இயந்திரம். இதற்காக தான் இதை கப்பலின் இதயம் என்றும் சொன்னேன்.

இப்போது வழக்கத்திற்கு மாறான அதிவேகத்தில் இயங்கிய இயந்திரத்தில் சூடேறி சூடேறி அதன் அமைப்பில் எங்கேனும் உடைவை ஏற்படுத்தி சிந்திய எண்ணெயும் வெப்பமும் இணைந்து தான் இந்த தீயை எழுப்பியிருக்க வேண்டும். எண்ணெயில் பற்றிய தீ முதலில் எண்ணெயை எரிக்கும். பிறகு அதனோடு  இணைந்த உலோகத்தில் பரவி எரிந்து அதை பழுக்கவைத்து உருக்கும். அந்த உருக்கு நெய்யாக வழிந்து பரவும். பிறகு அந்த நெய்யில் பற்றும் தீ வெடித்து எரியத் தொடங்கும். இந்த தீ மிகமிக ஆபத்தானது. வெடித்துச் சிதறும் இந்த தீப்பிழம்புகளில் உலோக உருக்கும் எண்ணெயும் கலந்த கலவையாக தூரம்வரை தெறித்து விழும். அருகே யாரும் நெருங்க முடியாது..

பிரதான இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு கீழே இயந்திரங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் கழிவுஎண்ணெயும் சேகரித்து வைக்க குறுக்கே தடுப்புகள் கொண்ட முழுவதும் மூடப்பட்ட  தொட்டிகள் (Sump tanks) இருக்கும். அதன் மேல் அமைக்கப்பட்ட மேடையில் தான் பிரதான இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். வெடித்துச் சிதறும் தீப்பிழம்புகள் இந்த தொட்டிகளுக்குள் புகும் போது தீ அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கும். அரங்கின் அடிப்பகுதி மொத்தத்திலும் பரவும் தீ அதன் பிறகு கப்பலுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டிருக்கும் தொட்டிகளை (Fuel tanks) நோக்கி செல்லத்தொடங்கும்.

தீயோடு எழுந்து வந்த கரும்புகை
காற்றை வெளியேற்றி அரங்கமெங்கும் பரவியது. அதன் நெடி நாசிகளை தீண்டி  மூச்சில் கலந்து தலைக்குள் உக்கிரமாக ஏறியது. சுவாசக்குழலை நிரப்பி கண்களை இருட்டச்செய்து மயக்கநிலைக்கு இட்டுச்சென்றது.

அப்பால் தீயின் பக்கம் நின்றவர்கள் ஆ...என்ற அலறலோடு அடுத்த பக்கத்தில் இருந்த படிகளில் எழும்பி தாவியேறி மேல்தளத்திற்கு முன்னேறி சென்று கூச்சலிட்டனர். அவர்கள் ஏறி நின்ற மேல்தளம் வரை தீயின் நாக்கு சுழன்று நெடுநெடுவென எழுந்தெரிந்தது. இவையாவும் கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் முடுக்கிடவிடப்பட்ட ஒரு சீரான நிகழ்வாக நடக்க தொடங்கியிருந்தது.

நான் புகையாலும் நெருப்பாலும் எழுந்த எரிச்சலிலும் மயக்கத்திலும் இருந்து விடுபட முயன்று கண்களை கசக்கி புரையேறிய நாசிகளை தேய்த்து நிதானித்து ஒரு ஒழுங்குக்குள் வர முயன்றேன். புகைக்கு நடுவே அகப்பட்ட எனக்கு புறகாட்சிகள் துலங்க சற்று நேரமாகியது. பிறகு சற்று நிதானித்து பார்க்கும்போது எதிரே பற்றியெரிந்த தீயின் எழுச்சி திகைப்பை ஏற்படுத்தியது.  சிலகனங்கள் என்னசெய்வதென்று அறியாது அகம் அதிர்ந்து சுற்றும்முற்றும் பார்த்தேன். 

பொறி தட்டியது. தீயை அணைக்க வேண்டும். அதற்கான தீயணைப்பான்களும் (Fire Extinguisher) கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கின்றன. நம்மால் முடியுமா. தீ நம்மை சூழ்ந்துகொண்டால் என்ன செய்வது. யோசிக்கவெல்லாம் நேரமில்லை. உடனே துரிதமாக செயல்பட்டாகவேண்டும். 

இப்படிதான் நான் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அப்போது என் எண்ணம் யாவும் அதற்கு நேர்மாறாக இருந்தது. இன்று போல் நான் அன்று இல்லை. இன்றாக இருந்திருந்தால் தீயையும் அதன் புகையையும் துச்சமென எண்ணி துணிந்து எதிர்த்து நின்றிருப்பேன். ஆனால் அன்று நான் கடலுக்கு புதியவன். ஒரு புது மாலுமி. கடல் ஈன்ற புதுசிசு. அதன் உலகத்தில் இப்போதுதான் நடக்க பழகிக்கொண்டிருக்கிறேன். அதன் மொழியறியாது. திசை தெரியாது. ஏட்டில் தான் அனுபவம். செயலில் அல்ல. எனக்கு தெரியும். கடல் இன்னும் என்னை தன் குழந்தையாக முழுதாய் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு முழுதும் என்னை ஒப்புக்கொடுத்தபின் தான் அதன் மடியில் ஏறி அமர்ந்தேன். அது என்னை அள்ளி அணைத்து சீராட்டி உச்சிமுகரலாம் அல்லது இந்த தீயில் எறிந்து கூட கைகழுவி விடலாம். என்ன செய்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருந்தேன். புகார் கூறுவதில் எந்தப் பொருளுமில்லை. 

அடுத்ததாக கப்பல். எப்போதுமே தன் நாவில் தீயை கக்கிக் கொண்டிருக்கும் ஒருவகை டிராகன் அது. அதை சாந்தப்படுத்தும் கலை தெரிந்திருக்கவேண்டும். தெரிந்திருப்பவனை அது தன் கழுத்தில் ஏற்றி உலகை சுற்றி பறக்கும். புதுஉலகிற்கு இட்டுச்சென்று பொன்னும் மணியும் அளிக்கும். அதேநேரம் அதன் மூர்க்ககுணமும் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படும். அப்போது தேர்ந்தவர்களை கூட அசந்த நேரம் பார்த்து தான் கொடிய நாவுகளால் வீழ்த்தக் காத்திருக்கும். அதன் நாவுகளில் அகப்படாமல் இருப்பது ஒரு கலை. அந்தக் கலையை ஒவ்வொரு மாலுமிக்கும் தெரிந்திருக்கவேண்டும். அதற்கான பயிற்சியின் ஆரம்பப்புள்ளியில் தான் நான் அப்போது இருந்தேன். 

அந்த நேரத்தில் தரையில் வாழும் ஒருவனால் எந்தளவுக்கு சிந்திக்க முடியுமோ அந்தளவுக்கு தான் என்னால் சிந்திக்க முடிந்தது. இங்கு கட்டிடம் ஒன்றில் தீ பற்றினால் அதன் உள்ளிருக்கும் ஒருவன் என்ன செய்வான். உடனே அங்கிருந்து வெளியேற முயற்சிப்பான். பிறகு தானே தீயை அணைப்பது பற்றி சிந்திப்பான். ஆனால் கப்பலில் அது முடியுமா. கப்பலில் பற்றிய தீயை கப்பலில் இருந்து தான் அணைக்க வேண்டும். நான்கு பக்கத்திலிருந்தும் எழுந்து தன் கொடிய நாவுகளால் சூழ்ந்து வீழ்த்த வரும் தீயை அதற்கூடாகவே அதன் மத்தியில் நின்றுதான் வீழ்த்தவேண்டும். 

ஒரு கப்பலில் தீ பற்றுவது என்பது ஒரு மாலுமியின் உடலில் பற்றியதற்குச் சமம். கப்பலோடு சேர்ந்த கப்பலின் ஒரு அங்கம் தான் அதன் மாலுமி என்பவன். கப்பலில் இருக்கும் வரைதான் அவன் மாலுமி. அதுவரை தான் அவனுக்கு கடல் கைகொடுக்கும். தீக்கு பயந்து கப்பலை கைவிட்டு கடலில் குதிப்பவனை கடலும் வீழ்த்த தான் காத்திருக்கும்.  

கப்பலில் தீ எழும்போதே அது தன் உடலிலிருந்து பற்றி எழுவதாக ஒரு மாலுமி நினைக்கத் தொடங்கிவிடுவான். அப்போதே அவன் அகம் படபடத்து தீயோடு போராட தொடங்கிவிடும்.
உடனே அதை அணைக்க அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் கட்டுப்பாட்டை மீறி தீ செல்லும்போது கூட அவன் கடலில் குதித்து உயிர்பிழைக்க நினைக்கமாட்டான். அவன் கடலில் குதித்து மூழ்குவது என்பது கப்பலை மூழ்கச்செய்வது போலாகும் என்பது அவனுக்கு தெரிந்திருக்கும். கடைசி  மூச்சு வரை அவன் போராட்டம் தொடரும்.

எனக்கு அந்த நேரத்தில் தோன்றியதெல்லாம் உடனே நான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். இந்த கப்பலை விட்டு வெளியேறி கடலில் பாய்ந்து நீந்தி எங்காவது செல்ல வேண்டும். கண்ணுக்கெட்டும் தொலைவில் தான் தென்னாப்பிரிக்க கரை உள்ளது. சிறிது நேரம் நீந்தினால் கரையை அடைந்துவிடலாம். ஆனால் வெளியே வீசும் புயலிலும் எழும் பேரலைகளும் நம்மை என்ன செய்யும். நினைக்கவே அச்சமாக இருந்தது. இந்த நேரத்தில் நான் குதித்தால் அடுத்த நொடியே எழுந்துவரும் பேரலைகள் என்னை அறைந்து சுழற்றி வீசி தன் கொடும் நாவுகளில் உள்ளிழுத்து விழுங்கிக்கொள்ளும்.  

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்      
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு 
- திருக்குறள்.

தொடரும்.


Thursday 16 July 2020

டாஃப்னிக்கின் யானைக்கன்று

நான் ஒருமுறை கென்யாவில் உள்ள துறைமுக நகரமான மொம்பாசாவிற்கு கப்பலில் சென்றிருந்தேன். கென்யா செல்கிறோம் என்றவுடன் அங்குள்ள சாவோ (Tsavo) தேசிய வனக்காப்பகம் தான் நினைவுக்கு வந்தது.  மொம்பாசாவிலிருந்து சாவோவிற்கு நெடுந்தொலைவு. ஆகவே அங்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக அருகிலிருந்த வால்கஞ்ச் (Mwaluganje)  யானைகள் சரணாலயத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டேன். ஏஜென்டிடம் பேசி டாக்ஸிக்கு ஏற்பாடு செய்து ஒரு குழுவாக கிளம்பினோம். டாக்ஸியில் நகரத்தை கடந்து சரணாலயப்பகுதிக்கு சென்றவுடன் காடுகளில் பயனிப்பதற்கென்றே பிரத்யோகமாக  வடிவமைக்கப்பட்ட வாகனத்திற்கு  மாறி நான்கு மணி நேரம் வரை காடுகளின் புழுதிப் பாதைகளுக்கு ஊடாக  பயனித்து வனவிலங்குகளை அருகில் சென்று பார்த்துவிட்டு மீண்டும் கப்பலுக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் 6 மணி நேரங்களுக்குள் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும். எனக்கு ஆர்வமாகவும் அதை விட உள்ளூர பயமாகவும் இருந்தது. ஏனெனில் நாங்கள் செல்வது வனவிலங்குகளை அருகிலிருந்து பார்ப்பதற்காக. அவைகள் எங்களின் மீது தாக்குதலில் ஏதும் ஈடுபட்டால் உயிர்பிழைக்க என்னவெல்லாம் செய்வது என்பது பற்றிய திட்டமிடலிலேயே சிந்தனை முழுதும் இருந்தது.

ஆனால் அப்போது தான் நாங்கள் எதிர்பாராத ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது. எங்களோடு பயனித்த நண்பன் ஒருவன் செல்லும் வழியில் இருந்த ஒரு மதுபான விடுதியை பார்த்துவிட்டு சிறிது பீர்  அருந்திவிட்டு செல்லலாம் என்று வற்புறுத்தவே உள்ள நுழைந்தோம். அவ்வளவு தான். அங்கே நாங்கள் செலவு செய்த நேரத்திற்கு பிறகு  கப்பலுக்கு திரும்புவதற்கே மிச்சமிருந்த நேரம் சரியாக இருந்தது. அதோடு என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றான ஆப்ரிக்க யானைகளையும், காண்டாமிருகங்களையும் சென்று சந்திக்கும் ஆசை காலி செய்யப்பட்ட பீர் போத்தல்களில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு இதுநாள் வரை மொம்பாசா செல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. வரும் காலங்களில் நிச்சயம் செல்வேன்.

எனக்கு கென்யா என்றவுடன் சாவோ வனக் காப்பகம் தான் நினைவுக்கு வரும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அதற்கு டாஃப்னி ஸெல்ட்ரிக் ( Daphne Sheldrick) என்கிற ஆங்கிலப் பெண்மணியை பற்றி ஏற்கனவே வாசித்திருந்தது தான் காரணம். வன அதிகாரி ஒருவரை மனந்த இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்களுக்காகவே வாழ்ந்தவர்.குறிப்பாக யானைக் கன்றுகள். கென்யாவில் வருடா வருடம் யானைகள் அவைகளுடைய தந்தங்களுக்காக கொல்லப்பட்டன. 1990இல் உலகம் முழுவதும் தந்தங்கள் தடை செய்யப்பட்டன. அப்படியிருந்தும் தொடர்ந்து யானைகளை சட்டவிரோதமாக அழித்தனர். லாபம் தரும் இந்த வேட்டையில் இன்றளவும் பல கும்பல்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் கேரள தமிழக வனப்பகுதிகளில் சில கும்பல்கள் யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடுவதாக ஒரு ரகசியத்தகவல் உண்டு. கென்யாவில் ஒரு கட்டத்தில் மாதத்திற்கு 50 யானைகள் வீதம் கொன்றனர். அப்படியானால் வருடத்திற்கு 600 யானைகள். இந்தியாவிலும் பல வருடங்கள் இந்த நிலை நீடித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் அவைகளின் வாழ்விடங்களை சூறையாடி காட்டுக்கே ராஜாவான அவைகளை பஞ்சம் பிழைக்க அனாதைகளாக அலையவிட்டு தெருக்களில் பிச்சையெடுக்க கையேந்தவிட்டது என அவைகளுக்கு மனித இனம் இழைத்த கொடுமைகளை சொல்லிமாளாது. இவ்வளவுக்கும் மத்தியில் யானைகள் இன்றும் உலகில் எஞ்சியிருப்பது ஆச்சர்யம் தான்.

இவ்வாறு யானைகள் கொல்லப்படும்போது தனித்துவிடப்படும் கன்றுகள் சிலநாட்களில் செத்துப்போகும். இந்தக் கொடுமைகளை கண்ணுற்ற டாஃப்னிக், யானைக் கன்றுகள் காப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். கன்றுகள் வளர்ந்து 3,4 வயதை எட்டியதும் அவற்றை மறுபடியும் ஒரு யானைக்கூட்டத்துடன் சேர்த்துவிடுவார். ஆனால் பால்குடி மாறாத யானைக் கன்றுகள் எவ்வளவு தான் கவனமாக பராமரித்தாலும், எத்தனை போத்தல் பசுப்பால் கொடுத்தாலும் அவை இறந்து போயின. காரணம் அவைகளுக்கு பசுப்பால் ஒத்துக்கொள்ளவில்லை. பலவித சோதனை முயற்சிகளுக்கு பின் டாஃப்னிக் ஒரு புதுவிதபாலை கண்டுபிடித்தார் அது தேங்காய்ப்பால். தற்செயலாக தேங்காய்ப் பாலைப் பருகியபோது கன்று தப்பிவிட்டது. அன்றிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் யானைக் கன்றுகளுக்கு உணவு அதுதான்.

‌1972இல் அவரிடம் ஒரு யானைக் கன்று அனாதையாக வந்து சேர்ந்தது. அதற்கு எலெனோர் என்று பெயர் சூட்டி வளர்த்து வயது வந்தததும் அதை காட்டு யானைகளுடன் சேர்த்துவிட்டார். 22 வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் காலை 1994இல் ஒரு யானைக்கூட்டம் அவரிடம் வந்தது.  அந்தக் கூட்டத்தில் எலேனோர் இருப்பதாக அவருடைய உள்ளுணர்வு சொன்னது.  'எலேனோர்' என்று குரல் கொடுத்தார். அந்தப் பெரிய கூட்டத்திலிருந்து ஒரு யானை மட்டும் அவரை நோக்கி நடந்து வந்தது. அதை அவர் தடவிக்கொடுத்தார். எலேனோர் அவரை அடையாளங்கண்டு கன்றை தூக்குவது போல மெதுவாக தடவி அவரை தூக்கி விளையாண்டது.

‌அதன்பிறகு தான் டாஃப்னிக்கிற்கு தன்னுடைய சுயசரிதை எழுதவேண்டும் என்று ஆசை பிறந்தது. பிறகு அவர் எழுதி வெளியிட்ட தன்னுடைய வாழ்க்கை கதை அவருடைய கதை மட்டுமல்ல.  யானைகளுடைய கதையும் கூட. புத்தகத்தின் பெயர் Love Life and Elephants. நைரோபியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு டாஃப்னிக் மரணமடைந்த போது அவருக்கு வயது 82. அவர் நடத்திவரும் யானைக் கன்று அனாதை ஆசிரமத்தில் இதுவரை 130 யானைக் கன்றுகளை காப்பாற்றி அவற்றை காட்டிலே சுதந்திரமாக விட்டிருக்கிறார். டாஃப்னிக் சேவையை பாராட்டி  இங்கிலாந்து மகாராணி எலிஸபெத் அவருக்கு OBE பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறார்.

‌சில வருடங்களுக்கு முன்பு டைம் இதழில் வெளியான அவருடைய பேட்டியை தேடி வாசித்தேன். அதில் அவர், " யானைகள் நம்பமுடியாத அளவுக்கு புத்திக்கூர்மை உடையவை. (ஜெயமோகன் ஒரு சிறுகதையில் கூட எழுதியிருப்பார் (மத்தகம் என்று நினைக்கிறேன்) மனிதனுக்கு ஆறறிவு. நாய்க்கு ஏழறிவு. யானைக்கு எட்டறிவு என்று. இதே கடலில் வாழும் நாங்கள் கடலோடிக்கு ஏழறிவு டால்ஃபின்களுக்கு எட்டறிவு திமிங்கலத்திற்கு ஒன்பது அறிவு என்போம்.) மனிதன் ஏன் தங்களை கொல்கிறான் என்று யானைகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவை தங்கள் தந்தங்களை மரங்களுக்கு ஊடாகவும் இழைதழைளில் மறைவாகவும் மனிதர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வாழ்கின்றன. இப்போதெல்லாம் அவைகள் பகலில் வெளிவருவதில்லை. மனிதர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள இரவுப் பிராணிகளாக மாறிவிட்டன். வேட்டை மிருகங்களான சிங்கம், புலி, சிறுத்தை கூட சுதந்திரமாக காடுகளில் வாழ்கின்றன. ஆனால் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காத யானைகள் மட்டும் ஏன் இந்த உலகத்திலிருந்து அழிக்கப்படுகின்றன. இன்றைக்கு இரவுப் பிராணிகளாக மாறுவது தான் அவைகளுக்கு ஒரே வழி" என்று சொல்லியிருப்பார்.

‌மனிதர்களைப் போலவே யானைகளும் இறந்த போன மற்ற யானைகளுக்காக தூரங்களிலிருந்து வந்து மௌனமாக நின்று அஞ்சலி செழுத்துகின்றன. அவைகள் வருடக்கணக்கில் துக்கம் அனுட்டிக்கின்றன.  கேரளத்தில் வெடிவைத்து காயப்படுத்தப்பட்ட  யானை தன் கூட்டத்தை விட்டு பிரிந்து வந்தது இதன் காரணமாகவே கூட  இருக்கலாம். தன் கூட்டம் தன்னை நினைத்து வருந்தக்கூடாது,  துக்கத்தால் வருடக்கணக்கில் மௌனமாக தனக்காக கண்ணீர் சிந்தக்கூடாது என்ற எண்ணமாக கூட இருக்கலாம். யானைகள் கௌரவமானவை. ஏமாற்றியோ திருடியோ பிழைக்காது. அதைப்போல அவை கோலையாக மடிவதையும் விரும்பாது. கடைசிவரை போராடியே சாகும். யானைகள் அதீத வலி தாங்கும் சக்தி உடையவை. வலியோடு இரண்டு வாரங்கள் வரை போராடி தான் அந்த கர்ப்பிணி யானை மடிந்துள்ளது.


‌யானைகள் மரித்த இடத்தில் தடிகளையும் தழைகளையும் பரப்பி மற்ற யானைகள் அவைகளுக்கு மரியாதை செய்கின்றன. ஆனால் நாம் அவைகளுக்கு சில்லறைகளை பிச்சையாக போடுகிறோம். அவ்வளவு தான் நமக்கும் அவைகளுக்கும் வேறுபாடு.


Monday 6 July 2020

நானும் முத்தமும் :-

 

இன்று சர்வதேச முத்த தினம். நேற்று இரவு முழுவதும் யோசித்துப்பார்த்தேன்;  நாம் யாருக்காவது முத்தம் கொடுத்திருக்கிறோமா; அல்லது நமக்கு தான் யாராவது முத்தம் கொடுத்திருக்கிறார்களா என்று. சமீப வருடங்களில் இது போன்ற நல்ல காரியங்களை நான் செய்யவே இல்லை என்று நினைக்கும் போது எழுந்து வரும் கசப்பு இந்த வாழ்வின் மீதான நம்பிக்கையை மொத்தமாக இழக்கச் செய்கிறது. இளமையில் வறுமை கொடியது. ஒரு முத்தத்திற்கு கூட வாய்ப்பில்லாத இளமை அதைவிட கொடியது. இதை நினைத்து நினைத்து இரவு முழுவதும் உறக்கம் இல்லை. இப்பொழுதெல்லாம் இயல்பாகவே உறக்கம் வர நேரமாகிறது. இது போன்று துயரம் மேலிடும் சமயங்களில் சொல்லவே தேவையில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருமுறை அர்ஜென்டினா சென்றிருந்தேன். அப்போது அங்கு பின்பனிக்காலம் தொடங்கியிருந்தது. நாங்கள் இருந்த சான் லொரான்சோ என்கிற துறைமுக நகரத்திலிருந்து ரொசாரியோ என்கிற ஸ்பானியர்களின் பழைய நகரத்திற்கு செல்ல ஒரு மணி நேர பயணம். எங்களுக்கு மகிழுந்து சாரதியாக வந்தவர் ஒரு இளம் பெண். நான்கு நாட்கள் அங்கு இருந்தோம். ஒவ்வொரு நாளும் எங்களை கப்பலில் வந்து அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி காண்பித்து மீண்டும் கப்பலுக்கு அழைத்து வருவார். கடைசியாக கப்பல் கிளம்புவதற்கு முன்பு விடைபெறும் நாள் வந்தது. பேசியதைவிட கூடுதலாக இருபது டாலரும் அவர் நான்கு வயது மகளுக்கு மிட்டாய்களும் கொடுத்ததற்கு என்னை வாஞ்சையாக கட்டியணைத்து இரண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தார். இது ஸ்பானியர்களின் வழக்கம்.  அவர்கள் சாதாரணமாகவே ஒருவொருக்கொருவர் முத்தத்தின் மூலம் தான் அன்பை பறிமாறிக்கொள்வார்கள். அவரின் மகள் பெயர் மெஸியா. ஆம் ரொசாரியோ தான் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பிறந்த ஊர். சில வருடங்களுக்கு முன்புவரை அங்கு பிறக்கும் நான்கில் இரண்டு குழந்தைகளுக்கு மெஸ்ஸி என்று தான் பெயர் வைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு ஒருநாள் அப்படி பெயரிடுவதை அரசு தடை செய்துவிட்டது. 

கடந்த வருடம் பிரிட்டன் சென்ற போது என் நீண்ட நாள் தோழி ஒருத்தி என்னை சந்திக்க வந்திருந்தாள். ஏழு வருடங்களுக்கு பிறகு அவளை பார்க்கிறேன். அன்பு நிரம்ப அவளை அணைத்து முத்தமிடும்போது அவள் மட்டும் தான் முத்தமிட்டாள். எனக்கு முத்தமிட தெரியவில்லை. என் உதடுகளிலிருந்து காற்று மட்டுமே வந்தது. கிட்டத்தட்ட முத்தமிடுவதையே மறந்திருந்தேன். அவள் சிரித்துக்கொண்டு இத்தனை வருடத்தில் முத்தமிடுவதை கூட மறந்துவிட்டாயா என்றாள். எனக்கு அந்த நேரத்தில் அவள் சொன்னது சற்று அவமானமாக தான் இருந்தது .

ஐரோப்பியர்கள் நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்திக்கும்போது ஒருவரை ஒருவர் அனைத்து முத்தமிட்டுக்கொள்வார்கள். அந்த முத்தம் சற்று வித்தியாசமானது. ஒரே நேரத்தில் இருவரும் முத்தமிட்டுக்கொள்ள வேண்டும். ஒரு கன்னத்தில் மறு உதடும் மறு கன்னத்தில் ஒரு உதடும் என பொருந்த இச் என்று ஒரு முத்தம். ஒரே நேரம்; ஒரே சத்தம்; ஆனால் இரண்டு முத்தம். இரண்டு முத்தங்களுக்குமிடையே நேர வேறுபாடு துளியளவு கூட இருக்க கூடாது. இது ஒரு மேற்கத்திய முத்தக்கலை. இதை எனக்கு சில வருடங்களுக்கு முன்பு அவள் தான் சொல்லிக்கொடுத்தாள். பலகட்ட முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பிறகு இந்தவகை மேற்கத்திய முத்தக்கலையில் தேறி வந்திருந்தேன். ஆனால் இத்தனை வருட இடைவேளியில் இப்போது மறந்துவிட்டேன். 

அவளோடு பேசிக் கொண்டிருந்த நேரம் முழுதும் என் ஞாபகம் எல்லாம் விடைபெறும் நேரத்திலாவது சரியாக முத்தமிட்டு விட வேண்டும் என்பதிலேயே இருந்தது. நான் கற்ற பழைய பாடங்களை ஒவ்வொன்றாக நினைத்து மனதிற்குள் பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.  கடைசியில் விடைபெறும் நேரம் வந்தது. சிரித்துக்கொண்டே அவள் என்னை அணைத்து முத்தமிட்டாள். நானும் முத்தமிட்டேன். ஒரு சத்தம்; இரண்டு முத்தம். இழந்த மரியாதையை மீட்டுக்கொண்டேன். 

அதுதான் முத்தமிட்டு விட்டாயே, பிறகென்ன உனக்கு வேண்டும் என்று கேட்க கூடாது. என்னதான் தோழியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாலும் அது காதலியின் உதடுகளில்  கொடுப்பதைப்போலாகுமா! 

ஆனால் இந்தியப் பெண்களை இவ்வாறு கன்னத்தில் முத்தமிட முடியாது. பொது இடத்தில் கை குழுக்கவே அச்சப்படும் பெண்களிடத்தில் போய் 'வா அன்பே முத்தமிட்டு அன்பை பறிமாறிக்கொள்ளலாம்' என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும். அதோடு நீயும் வேண்டாம் உன் அன்பும் வேண்டாமென்று ஓடிவிடுவார்கள். என்ன தான் இந்திய சமூகம் மேற்கத்திய நாகரிகத்திற்கு தன்னை பழக்கியிருந்தாலும்  மனதளவில் இன்னும் அவர்கள் இந்தியர்களாகவே இருப்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆனால் முத்தத்தின் பிறப்பிடம் இந்தியா தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா.. Sheril kirshenbaum என்கிற எழுத்தாளர் முத்தத்தை ஆராய்ச்சி செய்து எழுதிய The science of kissing என்கிற புத்தகத்தில் வரலாற்றில் முதன்முதலில் முத்தம் கொடுத்ததற்கான இலக்கிய சான்று 3500 வருட பழமையான இந்திய வேதங்களில் தான் முதலில் எழுதப்பட்டுள்ளது என கூறுகிறார். இத்தனை செழுமையான முத்த வரலாறு கொண்ட நாம் இன்று ஒரு முத்தமிடுவதற்கு எத்தனை அச்சப்படுகிறோம் என்று பாருங்கள்.

நேற்று இரவு உறக்கம் வராமல் ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு ஒரு முத்தக்காட்சியை பார்த்து மனம் வெதும்பி அந்த இரவு முழுதும் தூக்கத்தை தொலைத்தது நினைவிற்கு வந்தது. சென்னை Forum Mallஇன் தரைத்தளத்தில் ஒரு KFC இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். சென்னை செல்லும் போது எப்போதெல்லாம் பழைய ஞாபகங்கள் மேலிடுகிறதோ அப்போதெல்லாம் அங்கு சென்று சிக்கன் ஜிங்சர் பர்கரை இரண்டு அடுக்கு  சீஸ் வைத்து வாங்கி எதாவது ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒன்றும் அந்த ஜிஞ்சர் சுவை எனக்கு அவ்வளவாக பிடிக்காது தான். இருந்தும் எங்கே சென்றாலும் திரும்பத் திரும்ப அதையே சாப்பிடுகிறேன். 

  • இப்படி தான் கடைசியாக  கப்பலுக்கு போகும்முன் தனியாக அங்கு சென்றேன். நான் அமர்ந்திருந்தது வாசலை பார்த்தவண்ணமிருந்த ஒரு இருக்கையில். அந்த சூழலுக்கும் என் அப்போதைய மனநிலைக்கும் அங்கு இருப்பது எனக்கு சுத்தமாக பொருந்தவில்லை தான். என்ன செய்வது வந்து விட்டோமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் போய்விடலாம் என்று சாப்பிட ஆரம்பித்தேன். அந்த இடத்திற்கு தனியே வேறு துணையே இல்லாமல் வந்திருந்தது நான் ஒருவனாக தான் இருந்திருக்க வேண்டும். வாரநாட்களின் நன்பகல்நேரம் அது. கூட்டம் ஒன்றும் அவ்வளவாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நபர்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் என் வயதை ஒத்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அங்கு வந்தனர். அந்த ஆண் என்னைப்போலவே உயரம், நிறம், என் அளவேயுடைய சிறிய கண்கள். அவனை பார்த்து பின்பு தான் அவன்பின்னே வந்த அந்த நங்கையை கவனித்தேன். அவளை பார்க்கும்போது என்றோ எங்கோ பார்த்தது போன்று ஒரு உணர்வு. அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.  அவளும் நான் பார்ப்பதை பார்த்துவிட்டாள். அவள் முகத்தில் ஒரு சிறு கீற்று அளவேயான மின்னலைப்போல ஆச்சர்யம் வந்து மறைந்ததை பார்க்கமுடிந்தது. 

உயரத்தில் அவனைவிட சற்று குறைந்தவளாக இருந்தாலும் உடலிலும் சரி முகத்திலும் சரி அத்தனை அழகு. பிலிப்பைன்ஸ் பெண்ணை போன்ற ஒருவித வட்ட முகச்சாயல். சிறிய கூரிய மூக்கு, அகண்ட விழிகள், சிறிய மெல்லிய உதடுகள், பக்கவாட்டில் இழுத்து வைத்தது போன்று சற்றே அகண்ட பெரிய உதடுகள். நல்ல சிவந்த நிறம். கேசத்திற்கு சாயம் பூசியிருக்கவேண்டும். மொத்தத்தில் அவள் ஒரு வியப்பு. அந்த நேரத்தின் ஆச்சரியம்.

நான் இதையெல்லாம் எனக்கு எதிரே இருந்த இருக்கையில் அவர்கள் வந்து அமரும் வரை ஒவ்வொன்றாக கவனித்தேன். அவள் என்னை நோக்கியும் அவன் எனக்கு எதிர் திசையை நோக்கியும் உர்கார்ந்தது எனக்கு அவளை பார்க்க இன்னும் வசதியாக இருந்தது. அவனோடு பேசிக்கொண்டு இருக்கும்போதே இடையிடையே என்னை கவனிப்பதற்கும் அவள் மறக்கவில்லை என்று தெரிந்தபோது எனக்கு சற்று வியப்பாகவும் இனம்புரியாத மகிழ்ச்சியாகவும் இருந்தது. சில நேரங்களில் அவனிடம் செய்யும் புன்னகையை அப்படியே சிந்தாமல் முகத்தை மட்டும் திருப்புவதன் மூலம் என் பக்கமும் கடத்துவாள். திடீர் தாக்குதலில் என்ன செய்வது என்று தெரியாது நிலைகுலைந்து பின் சுதாரித்து பார்வையை என் மேசையின் பக்கம் திருப்பிக்கொள்வேன். 

சிறிது நேரத்தில் அவள் பாடுவது தெரிந்தது. உதடுகளை அசைத்து  கண்களை மூடி எனக்கு கேட்கும்படி சிறிது சத்தமாகவே பாடினாள். அந்த மெல்லிய குரலிலிருந்து எழுந்து வருவது இளையராஜாவின் பாடல் என்பதை அத்தனை அன்மையில் சுலபமாக யூகிக்க முடிந்தது. அவள் அணிந்திருந்த உடைக்கும் எண்பதுகளின் ராஜாவின் பாடலுக்கும் சற்றும் பொருத்தமில்லை. பாடும்போது கண்களை மூடிக்கொண்டு ராகம் கூட்டி பாடினாள். பாடிக்கொண்டிருக்கும் போதே நான் அசந்து அவளை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று கண்களை திறப்பாள்.  எதிரில் என் கண்கள் இருக்கும். பார்வையில் அத்தனை கூர்மை. அடுத்த தாக்குதல். 
இப்படியாக விழிகளிலேயே ஒன்றன்பின் ஒன்றாக தாக்குல்களை தொடுத்தவண்ணமிருந்தாள்.

ஆச்சர்யம் என்னவென்றால் நான் முறையிட்ட அதே ரக பர்கரையே அவளும் முறைப்பாடு செய்து தன் கண்ணாடி போன்ற சிறிய விரல்களில் ஏந்தி அகண்ட உதடுகளை மேலும் அகல திறந்து சிறமப்பட்டு உள்ளே  திணித்துக்கொண்டிருந்தாள். இந்த முறை நான் எங்கோ பார்த்துக் கொண்டு அவளை கவனிக்காதது போல பாவனை செய்துகொண்டு பகடியாக மெல்ல சிரித்தேன். அதைக்கவனித்த அவளும் புருவங்களை சுருக்கி உதடுகளை உள்ளிழுத்து கோபம் கொள்வதைப்போல என்னை பார்த்து முறைத்தாள். அவள் பக்கம் திரும்பினேன். இரண்டு நொடிகள்வரை இருந்தது அந்த முறைப்பு. உதடுகளை ஒரு பக்கமாக கோணி என்னை பழிப்பது போல பாவனை செய்துவிட்டு மறுநொடி சட்டென்று அவன் பக்கம் திரும்பிக்கொண்டாள். 

அதன் பிறகு முழு உணவையும் மொத்தமாக வாயில் திணிப்பதை நிறுத்திவிட்டு சிறிது சிறிதாக பிட்டு தின்றாள். இப்பொழுதும் நான் சிரித்தேன். அவளும் முறைத்தாள். விடாமல் பாடிக்கொண்டும் இருந்தாள். அவனும் ஏதோ இடையிடையே பாடினான். அவன் பாடுவதை கேட்கும் போது நாராசமாய் இருந்தது. பிறகு ஒரு முறை எழுந்து ஓய்வறை பக்கம் என்னை கடந்து சென்றாள். போகும் போதும் சரி வரும்போதும் சரி அவள் விழிகள் என்மீதே நிலைகுத்தியிருந்தது.  துருதுருவென மீன்குட்டிகளை போன்று அலைபாயும் விழிகள். சிலநேரம் சத்தமிட்டு சிரிப்பாள். சிலநேரம் கண்களை இடுக்கி சிறிய வட்ட முகத்தில் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு ஒருவித தெளிவோடு  உணர்வு பூர்வமாக பேசுவாள். 

அவன் அவளுக்கு நண்பனாக இருக்கவேண்டும் என்று மனம் ஏங்கியது. வாய்ப்பு கிடைத்தால் அவளோடு பேசிவிட வேண்டும். அதற்கு அவள் முதலில் தனியாக இருக்க வேண்டும். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி பேசுவது என எனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன்.ச்சே என்ன இது அபத்தம். இப்பொழுது தான் பார்க்கிறேன். பெயர் கூட என்னவென்று தெரியாது. அதற்குள் காதலா என்று எண்ணினாலும் எனக்கே தெரியாமல் அவள் மீது மிகமெல்ல காதலில் விழுந்து கொண்டிருந்தேன்.

அவள் கூந்தல்கட்டிலிருந்து பிசிறி சிதறி முகத்தில் வீழ்ந்து உதடுகளை உரசிக்கொண்டிருந்த பழுப்பு நிற சிறு முடிக்கீற்றை எடுத்து அவள் காதின் இடுக்குகளில் செருகி சரி செய்து அந்த முகத்தை என் கைகளில் ஏந்தி உதடுகளில் முத்தமிடலாம் போன்று இருந்தது. என் உதடுகளை கடித்து கைகளை முறுக்கி இயலாமையை எண்ணி வெம்மி உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இவையானைத்தும் நடந்தது மொத்தமாக ஒரு மணி நேரம் தான் இருந்திருக்கும். அவளிடமிருந்து சற்றும் என் பார்வையை அகற்ற முடியவில்லை. என்னையும் அந்த சூழலையும் மொத்தமாக மறந்திருந்தேன். என்னை முழுவதும் அவளுக்கு ஒப்புக் கொடுத்திருந்தேன். அவளுடைய செயல்கள் ஒவ்வொன்றும் கூட என்னை சார்ந்ததாகவே இருந்தது. 

இப்படியே நேரம் போனதே தெரியவில்லை. அவர்கள் அப்போது சாப்பிட்டு முடித்து பேசி களைத்திருந்தார்கள். அப்போது மெல்லிய சோர்வு விழிகளில் தெரிய  இரண்டொரு முறை என்னை பார்த்தாள்.  திடீரென்று ஏதோ நினைத்தவள் கைக்கடிகாரத்தில் மணியை பார்த்து அவனிடம் ஏதோ கூற இருவரும் ஒருமித்து எழுந்தார்கள். அப்போது தான் பார்த்தேன் அவள் எத்தனை அபூர்வமான பேரழகி என்று. உடலில் அத்தனை வனப்பு  இருந்தும் முகத்தில் சற்றும் குழந்தைத்தனம் மாறவில்லை. தமிழ்ப்பெண்களில் சிலருக்கு மட்டுமே இந்த கலை வாய்க்கும். 

எனக்கு பதட்டம் அதிகமாகிவிட்டது. கூட அவன் இருக்கும் போது எப்படி அவளோடு பேச முடியும்; போகப்போகிறாளே; இனி அவளை பார்க்க முடியுமா;  காலத்துக்கும் பார்க்க முடியாமல் கூட போகலாமே; மனம் குழம்பி தவித்தது; என்ன செய்வது என்றே தெரியாத ஒருவித கையறுநிலையை நினைத்து என்னையே நொந்து கொண்டிருந்தேன்.

எழுந்தவள் என்னை பார்க்காதது போல பார்த்தாள். மெல்ல புன்னகைத்துக்கொண்டே அவனை நெருங்கினாள். கால்களால் கொஞ்சம் உந்தி உயர்ந்து என் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தவாரே அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். நானும் அப்போது அவளது கண்களை தீர்க்கமாக பார்த்து அவளுக்கு உண்மையிலேயே புன்னகைத்தேன். அவளுக்கான என் அன்பை ரகசியமாக கடத்தினேன். இறுதியில் கதவை கடக்கும்போது என் பக்கம் திரும்பி ரகசியமாக கை அசைத்துவிட்டு சென்றாள். நான் அவளுக்காக உயர்த்திய கையோடு சில நொடிகள் அப்படியே அவள் செல்வதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். 

அவளுக்கும் மற்ற அனைவருக்கும் உலக முத்த தின வாழ்த்துக்கள்.
#happy_international_kissing_day

Saturday 27 June 2020

கடல்புறா பாகம் ஆறு


இருள். முழு இருள். துளி அளவு கூட ஒளி இல்லாத இருள். இருள் குறைந்தால் அது வெளிச்சம். ஆனால் இது குறைவே இல்லாத பூரண இருள். உலகில் நிலையானது இருள் தான். உலகமே அழிந்து சாம்பலாகி ஏதுமற்ற வெளியானலும் கடைசியில் எஞ்சுவது இந்த இருள் மட்டும்தான். ஒவ்வொரு கணமும் இருளோடு ஒளி போட்டி போடுகிறது. இறுதியில் இருளே வெல்கிறது. இருந்தும் மீண்டும் மீண்டும் ஒளி இடைவிடாது போட்டி போட்டு தோற்றுக்கொண்டே இருக்கிறது. இருள் நிலையானது. ஒளி நிலையற்றது. மயக்கம் தருவது. நிலையான இருளை மயக்கிதான் மின்னும் ஒளி நிலையற்ற வெளிச்சமாக படர்ந்து பரவுகிறது. மயக்கம் தெளிந்த இருள் மீண்டும் ஒளியை தின்று புதிதாக ஜனிக்கிறது. இருள் தான் வெளிச்சத்தை ஜனிக்கிறது. இருளில் தான் நாமும் ஜனிக்கிறோம்.

படிகளில் விழுந்து கிடந்தேன். ஒரு படியிலிருந்து பார்த்தால் அடுத்த படி தெரியாத அளவுக்கு இருள். கூடவே வலி. உயிர்போகும் அளவுக்கு வலி. கண்களை கூட திறக்க முடியவில்லை. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு அதன் இடுக்குகள் வழியே காற்றை உள்ளே இழுத்து உஸ் உஸ் என்று வாய் வழியே மூச்சுவிட்டு இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டேன். வலது கையால் படிகளை தொட்டுத் துழாவி இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து சுவரை ஒட்டி எழுந்து அமர்ந்தேன். இடது கை மணிக்கட்டில் தான் அடி. வலது கையால் அடிபட்ட கையை அழுத்தி பிடித்துக்கொண்டு இருளுக்குள் குனிந்து வெளிச்சம் வரட்டும் என்று காத்திருந்தேன். கப்பல் வெளியே புயலிலும் அலையிலும் சிக்கி அலைக்கழிந்து கொண்டிருந்தது.

இதுவே வேறு ஒரு நாளாக இருந்தால் இருட்டுக்குள் அமர்ந்து அழக்கூட செய்யலாம். கப்பல் வேலைக்கு வந்த புதிதில் பல நாட்கள் வலியிலும் வேதனையிலும் அறையில் தனிமையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். மதுவோ இசையோ ஆற்றுப்படுத்த முடியாத அளவிற்கு விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து மீண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு காயமும் தழும்பாக மாறும் வரை காத்திருந்து அடுத்த காயத்திற்கு உடலையும் மனதையும் தயார் படுத்தியிருக்கிறேன். இந்த சில வருடங்களில் கடல் வாழ்வின் வழியே எல்லாமே மறத்துவிட்டது. வாழ்க்கை புரிய தொடங்கிவிட்டது. மனம் தனிமைக்கும் உடல் வலிக்கும் பழகிவிட்டது.


அமைதி. முழு அமைதி. உலகே சூன்யமாகிவிட்டது போன்று அமைதி. வெளியே அலைகள் கப்பலில் மோதி சிதறும்போது ஒரு பேரிரைச்சல் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கும். பிரளயம் வந்தது போன்று கேட்கும் அந்த பெரும் இறைச்சலின் பிசிறு கூட உள்ளே என் செவியை எட்டாத அமைதி. அல்லது நான் படிக்கட்டில் தவறி விழுந்தேனே, அப்போது எதிரே சுவரில் சென்று தலை மோதியதில் காதுகள் எதுவும் பழுதாகிவிட்டதோ என்னவோ என தெரியவில்லை. எல்லைகள் அற்ற முடிவிலா சூன்யவெளியில் இருளுக்கு நடுவே நான் மட்டுமே தனிமையில் அமர்ந்திருப்பது போன்று உணர்வு. இதயத்தின் துடிப்பு மட்டும் அவசர கதியில் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களையும் காதுகளையும் மெல்ல திறந்து கூர்மையாக்கி அக வெளியிலிருந்து புற உலகிற்கு வருவதற்கு மெல்ல மெல்ல முயன்று கொண்டிருந்தேன்.

ஏதோ சிறு ஒலி. யாரோ எதுவோ என்னிடம் கேட்கிறார்கள். அது தலைமை அதிகாரியின் குரலாக தெரிகிறது. ஆம் அவரே தான். மெல்லமெல்ல இப்போது  அவரின் குரல் காதுகளில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. சில நொடிகளுக்கு பிறகு என்ன கேட்கிறார் என்று தெளிவாக விளங்குகிறது. என்னிடம் டார்ச் லைட் இருக்கிறதா என்று சத்தமாக கேட்டுக்கொண்டிருக்கிறார். கண்களை திறந்து அவர் இருந்த திசையை நோக்கி அவர் உருவத்தை பார்க்க முயற்சிக்கிறேன். இருளின் கண்களுக்கு எந்த உருவமும்  புலப்படவில்லை. கையை கால்சராய் பையினுள் நுழைக்கிறேன். அங்கு டார்ச் லைட் இல்லை.  உடலின் ஒரு அங்கம் போல  என்னுடன் எப்போதும் இருக்கும் டார்ச் லைட் அப்போது இல்லை. டார்ச் லைட்டும், ரேடியோவும், ஆக்ஸிஜன் அளவிடும் கருவியும், விஷ வாயுக்கள் அளவிடும் கருவியும் இல்லாமல் கப்பலில் எப்போதும் எங்குமே நான் செல்வது கிடையாது. ஆனால் இப்போது ரேடியோ தவிர வேறு எதுவுமே என்னிடம் இல்லை. புயல் ஏற்படுத்திய பதட்டத்தில் அவற்றை எடுக்க மறந்துள்ளேன். அதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் டார்ச் லைட் இல்லாததற்கு தலைமை அதிகாரி நிச்சயம் என்னை கடிந்துகொள்வார்.

அடுத்த அலை. பெரும் அலைகள் கப்பலை இடைவிடாது தாக்கி வடக்கு நோக்கி தென்னாப்பிரிக்கா கரையோரம் இருக்கும் பாறைகளுக்கு இழுத்துச் செல்கிறது. விரைவில் கப்பலின் இயந்திரம் சரிசெய்யப்பட்டு துரிதமாக கப்பலை இயக்கி அந்த பகுதியில் இருந்து தூரமாக சென்றுவிட வேண்டும். இல்லையெனில் நடக்கப்போகும் பேராபத்தை தடுக்க முடியாது. அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரம் வரை போராடலாம். அதற்கு மேல் கப்பல் பாறைகளில் மோதத் தொடங்கிவிடும். எழுந்து வரும் அலைகள் மதம்பிடித்த யானையின் தும்பிக்கையில் அகப்பட்ட ஒரு சிறு உடலை போல  கப்பலை தூக்கி புரட்டி பாறைகளை நோக்கி தள்ளிச் செல்கிறது.

அடுத்து ஒரு பேரலை. கப்பல் பக்கவாட்டில் சாய்கிறது. கை அனிச்சையாக சுவரில் பொருத்தப்பட்டிருந்த கைப்பிடியை பிடித்துக் கொள்கிறது. இல்லையென்றால் மீண்டும் படிகளில் விழுந்து உருண்டிருப்பேன். சாயும் திசையில் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு பழைய நிலைக்கு வந்து, அதன்பிறகு எதிர்திசையில் இழுக்கப்பட்டு மீண்டும் பழைய நிலை என சாய்ந்து சாய்ந்து எழும் கப்பலில் கைப்பிடியை விடாமல் ஒரு கையில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். அலையில் கப்பல் இங்கும் அங்குமாக பக்கவாட்டிலும், முன்னும் பின்னும் என எங்கே முழுவதும் கவிழ்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு சாய்ந்து சாய்ந்து மீண்டு எழுந்தது.


ஆனால் எவ்வளவு சாய்ந்தாலும் கடலினுள் மூழ்காது. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அது தான் கப்பலின் ரகசியம். பெரிதாக எதுவும் மாயம் இல்லை. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் ரகசியம் தான். அது எப்படி எந்தப்பக்கம் சாய்ந்தாலும் மீண்டும் பழைய தன் நிலைக்கே திரும்பிவிடுமோ அதுபோல தான் கப்பலும் எந்தப்  பக்கமாக சாய்ந்தாலும் மீண்டும் எழுந்து வந்து அதன் ஸ்திரத்தன்மையை அடைந்துவிடும். கப்பலின் மேல்பகுதியை விட அடிப்பகுதி அதாவது நீரினுள் மூழ்கியிருக்கும் பகுதி மூன்று மடங்கு வரை எடை அதிகமாக கொண்டிருக்கும். சாதாரணமாக ஒருவர் வெளியிலிருந்து பார்த்தால் முழுக்கப்பலும் நீரின் மேல் மிதப்பது போல தோன்றும். ஆனால் உண்மையில் அது அப்படி மிதக்காது. ஒரு பங்கு கப்பல் தான் நீருக்கு மேலே நம் கண்களுக்கு தெரியும். பெரும்பான்மையான மூன்று பங்கு வரையிலான கப்பல் மற்றும் அதன் எடை நீருக்குள் மூழ்கி இருக்கும். மேல் பகுதி எவ்வளவு தான் இங்கும் அங்கும் சாய்ந்தாலும் எடை அதிகம் கொண்ட கீழ்பகுதி நீருக்குள் வழுவாக இருந்து கப்பலை கவிழாமல் நிலைநிறுத்தும். அதுவும் இந்தக் கப்பலில் முழுவதும் இப்போது எடை ஏற்றப்பட்டுள்ளது. தேவைக்கு மேலே கப்பலின் எடை நீருக்குள் மூழ்கி உள்ளது. எனவே தலையாட்டி பொம்மை போல அலைகளுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்குமே தவிர கப்பல் முழுவதும் கவிழ்ந்துவிடாது.

மூன்று மடங்கு வரை எடை நீருக்குள் அமிழ்ந்து இருந்தும் கப்பலால் எப்படி மிதக்க முடிகிறது என்று சந்தேகம் எழலாம். அதற்கான விடையை சுமார் 2270 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்கிமிடீஸ் கூறிவிட்டார். அவரின் தத்துவம் "எந்த ஒரு பொருளையும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீரினுள் அமிழ்த்தும் போது, அது பெறும் எடையிழப்பு அதனால் வெளியேற்றப்பட்ட நீரின் எடைக்குச் சமம்". இது தான் கப்பல் நீரில் மிதப்பதற்கான சூத்திரம். இன்னும் சுலபமாக விளங்க வேண்டுமென்றால் நியூட்டனின் மூன்றாவது விதியை எடுத்துக்கொள்ளுங்கள். "ஒவ்வொரு விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டு". அதாவது கப்பலின் எடை  நீரின் மீது விசையை செழுத்தும் போது, அதே நீர் மீண்டும் கப்பலின் மீது எதிர்விசையை செழுத்தும். இது ஒரு முடிவிலா தொடர் செயல்பாடு. இதுதான் எவ்வளவு எடையுள்ள கப்பலையும் தொடர்ந்து மிதக்க வைக்கிறது.

நிமிடங்கள் கடந்து சென்றது. படிகளில் அமைதியாக அமர்ந்திருந்தேன். இருளுக்கு ஊடாகவே தலைமை அதிகாரி மெல்ல மெல்ல படிகளில்  இறங்கிக் கொண்டிருக்கும் சத்தம் இப்போது கேட்க ஆரம்பித்தது. திடீரென்று ஏதோ ஒரு இயந்திரத்தின் சத்தம். அதைத் தொடர்ந்து கப்பல் முழுவதும் வெளிச்சம் பரவியது. ஒவ்வொரு கப்பலிலும் எமர்ஜென்சி ஜெனரேட்டர் என்று ஒன்று இருக்கும். பிரதானமாக இருக்கும் ஜெனரேட்டர்களின் செயல்பாடு நிறுத்தப்பட்ட அடுத்த 45வது நொடிக்குள் இந்த எமர்ஜென்சி ஜெனரேட்டர் தானாகவே இயங்க தொடங்கிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.  இல்லையெனில் அது வைக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிப்பகுதியில் உள்ள தனி அறைக்கு யாராவது ஒருவர் சென்று இயங்கவைக்க வேண்டும். இது பொறியாளரின் பணி. இப்போது யாரோ ஒரு பொறியாளர் தான் புயலுக்கு நடுவே கப்பலின் வெளிப்பகுதிக்கு சென்று அதனை செயல்பட வைத்திருக்க வேண்டும்.

அடுத்த 12 மணி நேரங்கள் வரை இந்த ஜெனரேட்டர் தொடர்ந்து இயங்கி கப்பலில் தேவையான மற்றும் முக்கியமான இடங்களுக்கு வெளிச்சம் தரும். குறிப்பாக இயந்திர அறை, நேவிகேசன் அறை, நேவிகேசனுக்கு பயன்படும் மின் உபகரணங்கள், தீ அனைக்க பயன்படுத்தப்படும் பம்புகள் (Fire Pumps), கப்பலின் உள்ளே இருக்கும் முக்கியமான வழித்தடங்கள், கப்பல் மூழ்கும்போது தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் உயிர்பிழைக்கும் படகுகள் (Life boat, Rescue boat) என முக்கியமான இடங்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச மின்சாரத்தைக் கொண்டு நெருக்கடியான காலக்கட்டங்களில் போராடலாம். அதற்குள் பிரதான ஜெனரேட்டரை (Main) பழுதுபார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட வேண்டும். இல்லையெனில் முழுக்கப்பலும் இருள் தான். அதேபோல இந்த எமர்ஜென்சி ஜெனரேட்டரை எப்படி இயங்க வைப்பது என்று கப்பலில் உள்ள ஒவ்வொருவருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செயல்முறை விளக்கம் தர வேண்டும்.

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் சமுத்திரத்தில் மூழ்கிய போது அதில் இருந்த பொறியாளர் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. 30 பொறியாளர்களும் அவர்களுக்கு துணையாக இருந்த மற்ற பணியாளர்களும் என மொத்த பேரும் கப்பலோடு சேர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரணம் அவர்கள் டைட்டானிக் மூழ்கிய கடைசி நொடிவரை  இயந்திர அறையில் இருந்து கப்பலுக்கு மின்சாரம் தருவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த மின்சாரம் மட்டும் அப்போது கிடைக்காமல் போய் இருந்தால் அன்று ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது. 1500 பேர் இறந்த அந்த விபத்தில் 705 பேர் உயிர் பிழைத்தார்கள் என்றால் அதற்கு அந்த பொறியாளர்கள் தான் முதல் காரணம். தங்கள் உயிரை தியாகம் செய்து தான் இத்தனை உயிரை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. பிழைத்தவர்கள் அவர்களுக்கு தான் முதலில் நன்றி சொலுத்தியிருக்க வேண்டும்.





அதன்பிறகு பிரிட்டன் மகாராணி விக்டோரியா டைட்டானிக் பொறியாளர்களின்  தியாகத்தை பாராட்டி உலகெங்கிலும் உள்ள கப்பல் பொறியாளர்கள் தங்கள் தோள்களின் மீது அணியும் பட்டைகளில் (Epaulettes) உள்ள பொன்னிற கோடுகளோடு சேர்த்து வயலட் நிற கோடுகளையும்  அணிந்துகொள்ள என ஆணையிட்டார். அன்று அவர்கள் செய்த உயிர்தியாகம் இன்றும் உலக கப்பல் பொறியாளர்களின் தோள்களில் வயலட் நிற கோடுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இன்னொரு பக்கத்தில் அதே விபத்தில் அதிகாரிகள் தரப்பில் 59 பேர்களுக்கு 40 பேர் உயிர்தப்பிவிட்டனர். ஆனால் கேப்டன் உயிர்தப்பவில்லை. இறந்த 1500 பேர்களுக்கும் கப்பலுக்கும் சேர்த்து அவர் தானே பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே அவர் தற்கொலை செய்துகொண்டார். கப்பல் மூழ்கிய பிறகு அதன் கேப்டன் உயிரோடு இருந்தால் சட்ட வழக்குகள் மற்றும் மனவுளைச்சலை எதிர்கொண்டே வாழ்நாள் முழுதும் போய்விடும். அதற்கு கப்பலோடு சேர்ந்து தானும் மூழ்கிவிடுவதே ஒரு கேப்டனுக்கு தன் வாழ்வில் பெரிய நிம்மதியை தரும் என நம்புகிறேன்.

டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஒரு இரண்டாம் அதிகாரியின் மேற்பார்வையில் கப்பலிலிருந்து பயணிகள்  உயிர்பிழைக்கும் படகுகளுக்கு மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு வசனத்தை அழுத்தி சொல்கிறார். மூழ்கும் கப்பலிலிருந்து உயிர்காக்கும் படகுகளுக்கு பயணிகள் ஏற்றப்படும் போது இந்த வசனத்தை கூறலாம் என மாலுமிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அது 1840இல் மாலுமிகளுக்கான சட்ட விதிகளுள் ஒன்றாக இயற்றப்பட்டு
அத்தனை வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும்கூட டைட்டானிக் மூழ்கியதற்கு பிறகு தான் உலகப்புகழ் அடைந்தது. உலகெங்கிலும் இன்றுவரை கருனையின் வார்த்தைகளாக சொல்லப்பட்டு வரும் அந்த வசனம் "children and ladies first".

கப்பலில் விபத்துகள் நடப்பது முதலில் எங்களைப் போன்ற அதிகாரிகளின் கவனக்குறைவால் தான். ஆனால் கப்பல் மூழ்கும்போது முதலில் உயிர்தப்புவதும் நாங்கள் தான். அதே நேரம் முதலில் பலியாவது பாவம் ஏதும் அறியா பொறியாளர்கள் தான். கப்பலின் அடிப்பகுதியில் இருக்கும் இயந்திர அறையிலிருந்து அவர்கள் மேலே ஏறி வருவதற்குள் கப்பல் நீரில் முழ்கிவிடும். அந்த நேரத்திற்குள்ளாக தப்பி பிழைத்த அதிகாரிகள் கடலில் மூழ்கும் பொறியாளர்களுக்கு அஞ்சலி செழுத்த தயாராகி விட்டிருப்போம்.

கப்பலில் வெளிச்சம் வந்ததும் தான் தாமதம். தலைமை அதிகாரி படிகளில் இறங்கி விரைந்து கீழே சென்றார். என் பக்கம் திரும்பி பார்க்க கூடவில்லை. நானும் வலியை பொருட்படுத்தாது எழுந்து அவரை தொடர்ந்து சென்றேன். இயந்திர அறை இருக்கும் தளத்திற்கு மேல் தளத்தில் பணியாளர்கள் தங்குவதற்கான ஓய்வு அறைகள் இருக்கும். அங்கு ஓய்வில் இருந்தவர்கள் அபாய ஒலி கேட்டு இயந்திர அறை வாயிலில் வந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தோடு நின்றுகொண்டிருந்தனர். உயர் அதிகாரிகளின் கட்டளை இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.

தலைமை அதிகாரி வருவதை பார்த்து அவருக்கு வழிவிட்டு அனைவரும் ஒதுங்கி நின்றனர். அதில் ஒருவர் எங்களுக்காக கதவை திறந்து வைத்து பிடித்துக்கொண்டார். அவர்களின் முகங்களில் எல்லாம் பதட்டத்தையும் அடுத்து என்ன நடக்கபோகிறதோ என்கிற  திகைப்பையும் பார்க்க முடிந்தது.

வாயிலை நெருங்கியதும் இயந்திர அறையின் உள்ளிருந்து வீசிய வெப்பக்காற்று சட்டென்று முகத்தில் அறைந்தது. சாதாரண நாட்களிலேயே உள்ளே வெப்பத்தின் அளவு இயந்திரங்களின் இயக்கத்தின் காரணமாக சற்று கூடுதலாகவே இருக்கும். கூடுதல் என்றால் வெளியே நிலவும் வெப்பநிலையை விட இரண்டுமடங்கு வரை கூட சிலநேரம் கூடுதலாக இருக்கும். அதைவிட இயந்திரங்கள் எழுப்பும் காது சவ்வு கிழியும் சத்தம். இந்த சத்தத்தினாலும் அதீத வெப்பத்தினாலும் அந்த அறையையே சிலநேரம் நரகம் போல காட்சியளிக்கும். பொறியாளர்கள் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்காக  எப்படித்தான் வேலை செய்கிறார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும்.

இயந்திர அறை வாயில் வழியே கவனமாக தலைமை அதிகாரியும்  நானும் உள்ளே சென்றோம். அவர் சைகை காட்டிய பிறகு மற்றவர்களும் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். வாயிலின் அருகே இருக்கும் நடைமேடையிலிருந்து கீழே பார்க்கும்போது அந்த அறையே ஒரு மாபெரும் அரங்கம் போல காட்சியளிக்கும். கப்பலின் இந்த இயந்திர அறை இருக்கும் பகுதி முழுக்க முழுக்க கடலினுள் மூழ்கி இருக்கும். அப்போது தான் பிரதான இயந்திரம் இயங்கி வெளியே நீருக்குள் இருக்கும் காத்தாடியை சுழலச்செய்து கப்பலை செலுத்த முடியும். இந்த பகுதி தான் கப்பலில் உள்ள பொறியாளர்களின் உலகம். இந்த அரங்கத்தில் குறைந்தது ஐந்து தளங்கள் இருக்கும். கடைசி தளத்தில் தான் பிரம்மாண்டமான பிரதான இயந்திரம் இருக்கும்.

இன்றளவும் உலகின் பிரம்மாண்ட இயந்திரங்கள் யாவும் கப்பலில் தான்  பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் இயந்திரங்களின் பிரம்மாண்டங்களை ஒப்பிடும்போது தரையில் பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் எல்லாம் பத்தில் ஒரு பங்கு தான் இருக்கும். உதாரணத்திற்கு 2008இல் தயாரிக்கப்பட்டு Emma Maersk என்கிற 400 மீட்டர் நீளமுள்ள கண்டெயினர் கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் தான் இன்றளவும் உலகின் மிகப்பெரிய தனி இயந்திரம். அதன் நீளம் 27 மீட்டர். அகலம் 13.5 மீட்டர். மொத்த எடை 2,300 மெட்ரிக் டன்கள். இந்திய தண்டவாளங்களில் ஓடும் பெரும்பெரும் ரயில் என்ஜின்களின் எடை கூட சராசரியாக 120 மெட்ரிக் டன்கள் மட்டும் தான்.







இந்த ராட்சத இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு இயங்க வேண்டுமென்றால் எவ்வளவு எரிபொருள் தேவைப்படும் தெரியுமா. கச்சா எண்ணெய் மட்டும் 14000 லிட்டர் வேண்டும். (Heavy Fuel Oil - சுத்திகரிக்கப்படுவதற்கு முன் உள்ள கச்சா எண்ணெய் தான் நேரடியாக கப்பல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது). ஒரு நாளைக்கு 3.36 லட்சம் லிட்டர். இது தவிர ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு தனியே 1.2 லட்சம் லிட்டர் டீசல் வேண்டும். இந்திய சாலைகளில் எரிபெருள் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகளின் கொள்ளளவு கூட வெறும் 12000 லிட்டர் தான். இந்த ஒரு கப்பல் ஒரு நாளைக்கு இயங்கவேண்டுமென்றால் இதைப்போல 35 டேங்கர் லாரிகளில் ஏற்றக்கூடிய மொத்த எண்ணெய்யும் வேண்டும்.

மேலே நாங்கள் நின்ற தளத்திலிருந்து பார்க்கும்போது கீழே பிரதான இயந்திரம் இருந்த பகுதி முழுக்க புகை பரவியிருந்தது. கூர்ந்து பார்த்ததில் பொறியாளர்களையும் ஒருசில பணியாளர்களையும் புகைக்கு ஊடாக பார்க்க முடிந்தது. அவர்கள் அங்குமிங்கும் ஓடுவதும் ஏதோ அவசர வேலை செய்வதுமாக இருந்தனர். அதற்கும் மேல் உள்ள தளத்திலிருக்கும் இயந்திர கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமை பொறியாளர் கீழே பிரதான இயந்திரம் இருந்த தளத்திற்கு படிகளில் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் தலைமை அதிகாரி கீழே இறங்கி அவரை நோக்கி சென்றார். அவரோடு நாங்களும் கீழே சென்றோம். கீழே இயந்திரத்தின் அருகே சென்று தலைமை பொறியாளரிடம் தலைமை அதிகாரி பேச முற்பாட்டார். இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் நாங்கள் இருந்தோம். அடுத்த பக்கத்தில் சிலர் இருந்தனர். ஒரு வெளிச்சம். அதைத்தொடர்ந்து புகையும் நெடியும் கண்களையும் நாசியையும் கூராக தாக்கியது. திடீரென்று அடுத்த பக்கத்திலிருந்து எழுந்த தீ இயந்திரத்திற்கு மேலே பரவி எரிய ஆரம்பித்தது. அங்கிருந்து பணியாளர்கள் சத்தமிட்டு கூச்சலிட்டனர். நான் அப்போது கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நின்றேன்.

'கடுகத்தனை நெருப்பானாலும் கப்பலைக் கொளுத்திவிடும்'
- என் பழமொழி.

(தொடரும்.)

எதற்காக எழுதுகிறேன்

நாடுகள் கடந்து சுற்றி அலைபவன் நாடோடி. கடல்களில் அலைபவன் கடலோடி.  நான் ஒரு கடலோடி. கடல் தான் என் உலகம். கப்பல் தான் என் தேசம். என்னை ஒரு கடலோடியாக உணரும் தருனத்தில் தான் நான் முழுமை அடைகிறேன். மாலுமியாக இருப்பது எனக்கு வேலை மட்டுமல்ல அது என் வாழ்க்கைமுறை.

என் தாத்தா ஒரு ஆசிரியர். குடும்பம் விவசாய குடும்பம். நானும் தாத்தாவும் காலை விடிவதற்குள் வயலில் இறங்கினால் காலை உணவிற்குள் ஒரு ஏக்கர் வரப்பும் வெட்டி முடித்துவிட்டு கரையேறிவிடுவோம். விவசாயம் எனக்கு உழைக்க கற்றுக்கொடுத்தது. தாத்தா வாழ வழிகாட்டினார். நான்கு வயதிலிருந்தே தாய்  தந்தையரை பிரிந்து அவரிடம் தான் வளர்ந்தேன். இன்றும் அப்படித்தான்.

மழை கொஞ்சம் அழுத்தி பெய்தாலும் சாலை துண்டிக்கப்பட்டு ஊருக்குள் பஸ் வராது. பள்ளிக்கு 12 கி.மீ செல்ல வேண்டும். அவரோடு தான் தினமும்  செல்வேன். எனக்கு பள்ளி மூன்று மணிக்கே முடிந்துவிடும். அவருக்கு ஆறு மணி ஆகும். அதுவரை பள்ளி வளாகத்தில் இருந்த நூலகத்தில் காத்திருப்பேன். ஒருநாள் அங்கு இருந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கும்போது என்னுடைய வயது எட்டு. அன்றிலிருந்து வாசிப்பு பழக்கம் தொற்றிக்கொண்டது. பதிமூன்று வயதிற்குள் நூலகரின் வழிகாட்டலோடு இலக்கியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். மாமாவின் சேகரிப்பில் வீட்டிலிருந்த சோவியத் யூனியன் இதழ்களை வாசிக்கும் போது ரஷ்யாவிற்கு போவது பற்றி கனவு காண ஆரம்பித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது தினகரன் வசந்தத்தில் கப்பல் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது. அன்று ஏன் என்றே தெரியாமல் அந்தப் பக்கத்தை வெட்டி எடுத்து பாதுகாத்து வைத்திருந்தேன். அதை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கும்.

தாத்தா பணி ஓய்வு பெற்றவுடன் என்னுடைய ஒன்பதாம் வகுப்பிற்காக வேறு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். என் நல்ல நேரம் நான் பள்ளியில் சேர்ந்தது முதல் பஸ் வரவில்லை. வீட்டிலிருந்து பள்ளிக்கு ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. வெறும் 12 கிலோமீட்டர் தான். தினமும் சைக்கிள் மிதிப்பேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்தது ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பின் தங்கிய கிராமத்தில் இருந்த ஒரு கிருத்தவ பள்ளியில். படிப்பதை தவிர மற்ற அனைத்தையும் சரிவர செய்வேன். பாதிரியார்களும் ஆசிரியர்களும் பள்ளியின் கலை இலக்கிய முகமாக என்னை வைத்திருந்தார்கள். பாதிரியார் சென்னை லயோலா கல்லூரியில் விஷீவல் கம்யூனிகேசன் சேர்த்துவிடவா என கேட்டுக்கொண்டே இருப்பார். தாத்தாவிற்கு அதிகபட்சம் நான் ஒரு ஆசிரியராக ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் என் கனவுகள் எல்லாம் வேறாக இருந்தது.

எங்கள் பகுதியில் இருந்து அன்றே ஒரு கப்பல் பொறியாளர் உருவாகியிருந்தார். அன்று அது மிகப்பெரும் சாதனையாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. அவரின் வழிகாட்டலோடு சென்னை அமெட் பல்கலைகழகத்தில் சேர்ந்தேன். பிறகு இரண்டு வருடத்தில் பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு  பிரிட்டனில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து அங்கு சென்றேன். அப்போது எனக்கு வயது இருபது. அன்றிலிருந்து தொடங்கியது என் உலக பயணம். இந்த எட்டு வருடங்களில் வேலை மற்றும் படிப்பின் காரணமாக முப்பது நாடுகளை கடந்துள்ளேன். அதில் இருபதுக்கும் மேறப்பட்ட நாடுகளில் இறங்கி சுற்றியுள்ளேன்.

இதற்கு ஊடாக மூன்று வருடங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் ஒரு பொறுப்பில் இருந்து கட்சிப்பணியாற்றியது. வேலையில்லாமல் வீட்டில் இருந்தது. வேலை தேடி மும்பையில் சுற்றியது. சென்னையில் ஆறு மாதங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தது. காதல் தோல்வி. பிறகு தீவிரமாக கப்பலில் வேலை செய்ய ஆரம்பித்தது என இந்த பல்வேறு காலக்கட்டங்களில்  வாசிப்பை மட்டும் என்றுமே கைவிட்டது கிடையாது. கடந்த சில வருடங்கள் ஓய்வேயில்லாத வேலையின் காரணமாக கொஞ்சம் தேக்கமடைந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சாரு, ஜெமோ, எஸ்ரா தொடங்கி புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் வரை பின்னோக்கி சென்று தமிழ் நவீன இலக்கிய படைப்புகளை முடிந்தவரை வாசித்திருந்தாலும் எனக்கான ஒரு எழுத்தாளராக நான் நினைப்பது என்றுமே அ.முத்துலிங்கத்தை தான். அவர் ஒரு உலக குடிமகன். அவர் எழுத்து ஒரு உலக எழுத்து. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சொன்ன கனியன் பூங்குன்றனாக அவரை இன்று பார்க்கிறேன். அவர் வழியில் பயணிக்கிறேன். அவரையே என் ஆதர்சமாக கருதுகிறேன்.  சொமாலியாவில் கூட இலக்கியம் உள்ளது என்றும் அவர்களுக்கும் மேன்மையுண்டு என்றும் எழுதியவர் தமிழில் அவர் மட்டும்தான். துளி அளவிற்கு கூட அவர் எழுத்தில் வெறுப்பு இருக்காது. மானுடத்தின் மீதான அன்பும் கருனையும் நம்பிக்கையும் ஆற்றலோடு வெளிப்படுவதை அவர் எழுத்தில் பார்க்கலாம். 

கடந்த வருடம் அவர் எழுதிய தாய்மொழி என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன். அதன்பிறகு தான் எனக்கு இதுநாள்வரை கிடைத்த உலக அனுபவங்களை எழுதி ஆவனப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எழுதுவது என்றுமே என் வேலையில்லை என நினைத்திருந்த என்னை அவரின் அந்த ஒரு கட்டுரை தான் எழுத தூண்டியது. என் அனுபவங்கள் தாண்டி என்னால் எதையும் எழுத முடியாது என்ற தெளிவும் எனக்கு உள்ளது.

தமிழகத்திலிருந்து  மாலுமிகளாக உருவாகியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று இதுவரை எந்த ஆவணங்களிலும் முறையான பதிவுகள் இல்லை. ஆனால் என் கணக்கீட்டின் படி அவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இன்றைய தேதிக்கு வேலையில் இருக்கும் மாலுமிகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தொடும். ஆனால் அவர்களைப் பற்றி அவர்களின் வாழ்க்கை பற்றி இதுவரை பெரிதாக எந்த ஆவணங்களும் தமிழில் இல்லை. நான் தேடியது வரை தமிழ் இலக்கியத்திலும் அவர்களை பற்றிய பதிவுகள் மிகமிகக் குறைவே. இருக்கும் சில பிரதிகளும் மக்களிடமும்  வாசகர்களிடமும் வெகுவாக சென்று சேரவில்லை என்றே நினைக்கிறேன். 

மாலுமிகளைப் பற்றி மாலுமிகளால் மட்டும் தான் எழுத முடியும். வேறு எந்தவொரு எழுத்தாளராலும் எழுத முடியாது. இந்த நிலையில் எந்த ஒரு மாலுமியும் பெரிதாக எழுத முன்வராத சூழலிலிருந்து எழுத வந்த என் மூத்தவர்கள் எழுத்தாளர் நரசய்யா, ஜீனியர் விகடனில் மாலுமிகள் பற்றிய கட்டுரைகள் எழுதிய து.கனேசன், கப்பல்காரன் டைரி என்கிற பெயரில் இணையத்திலும் சிறு பத்திரிக்கையிலும் கடந்த சில வருடங்களாக எழுதிவரும் அண்ணன் ஷாகுல் ஹமீது ஆகியோரை என் முன்னோடிகளாக கருதுகிறேன். கடலோடி என்கிற வார்த்தையை கண்டறிந்து முதன்முதலில் புழக்கத்திற்கு கொண்டுவந்தவர் நரசய்யா. அவரின் 'கடலோடி' என்கிற புத்தகம்தான் கப்பல் வாழ்வை பற்றி தமிழ்மொழியில் எழுதப்பட்ட முதல் புத்தகம். ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த புத்தகம் தமிழுக்கு ஒரு பொக்கிஷம்.

ஆனால் இங்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.  இவர்களால் எழுதமுடியாத ஒன்றை என்னால் எழுதமுடியும் என்று நம்புகிறேன். இவர்களிலிருந்து நான் வேறுபட்டவன். இவர்கள் மூவரும் பொறியியலாளர்கள். துறை ரீதியாக இவர்களுக்கு தெரியாத கடலை பற்றிய கப்பலை பற்றிய பல நுணுக்கங்கள்  எனக்கு தெரியும். காரணம் நான் மட்டும் தான் கேப்டனின் வரிசையில் வரும் கப்பலை இயக்கும் கப்பல் மாலுமி. கடல்வாழ்வில் அவர்கள் பார்க்காத காட்சிகளையும் பெறாத அனுபவங்களையும் ஒருபடி மேலே சென்று என்னால் பெற முடியும். உதாரணத்திற்கு புயலில் நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கப்பலை இயக்கி கொண்டிருக்கும்போது அவர்கள் கப்பலின் அடியில் வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாத இயந்திர அறையில் வேலை செய்துகொண்டிருப்பார்கள்.

நான் தற்போது முகநூலில் எழுதிவரும் கடல்புறா தொடர்தான் என் எழுத்தின் தொடக்கம். செய்திகளாக மட்டும் இருந்தால் விரைவில் சலிப்பு தட்டிவிடும் என்று நிகழ்வுகளை புனைவுகளாக மாற்றி கற்பனை கலந்து எழுதி வருகிறேன். ஆரம்பத்தில் முகநூலில் விளையாட்டாக எழுதி பழகலாம் என்று தான் எழுத தொடங்கினேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட விரைவில் வெகுவான வாசகர்களை சென்று அடைந்தது எனக்கு மகிழ்ச்சிக்குரியது. வாசகர்கள் மட்டும் அல்லாது  பல எழுத்தாளர்களும் பெரியோர்களும் தொடர்ந்து வாசித்து வாழ்த்தி தங்களின் மேலான கருத்துக்களை கூறுவது நான் இனி மென்மேலும் பொறுப்பாக எழுதவேண்டுமென்ற தூண்டுதலை எனக்கு கொடுக்கிறது.

இதன் காரணமாக நண்பர்களின் ஆலோசனைப்படி நான் எழுதுவதற்கென ஒரு BLOG ஆரம்பித்துள்ளேன். நரசய்யாவிற்கு நன்றி கூறும் விதத்தில் அந்த தளத்திற்கு 'கடலோடி' என்று பெயரிட்டுள்ளேன். இனி இங்கு தான் எழுதுவேன். இதுவரை எழுதிய சில கட்டுரைகளையும் இங்கு பதிவு செய்துள்ளேன். இதுவரை கடல்புறா தொடரை முகநூலில் வாசித்தவர்கள் இனி இங்கு வந்து வாசிக்கலாம். வாசிப்பவர்களுக்கு புரிய வேண்டி இனிவரும் வரும் பதிவுகளில் சில படங்களையும் இணைத்து எழுதுகிறேன். கடலோடிக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

'கடலோடி' BLOG க்கிற்கான சுட்டியை பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.

நன்றி.

உலக கடலோடிகள் தினம்







வரலாற்று ஆவணங்களின்படி உலகின் முதல் கடல்வழி போக்குவரத்து நடந்தது இன்றிலிருந்து சுமார் 4600 வருடங்களுக்கு முன்பு. எகிப்தின் நான்காவது வம்சவழி மன்னன் நெப்ரூ (Sneferu) தன் காலத்தில் மூன்று பிரமிடுகளை கட்டினான். அதில் ஒன்று தான் எகிப்தின் மூன்றாவது பெரிய பிரமிடான சிகப்பு பிரமிட் (Red pyramid). இதன் சிறப்பு என்னவென்றால் இதுதான் பிரமிடுக்கு உண்டான கூம்பு வடிவ நேர்த்தியுடன் கட்டப்பட்ட உலகின் முதல் பிரமிட். இதன் காரணமாக இதனை உண்மையான பிரமிட் (True pyramid) என்றும் அழைக்கின்றனர். இந்த பிரமிடை கட்ட வேண்டிதான் செங்கடல் வழியாகவும் நைல் நதி வழியாகவும் லிபியாவில் இருந்தும் பன்டைய நுபியாவில் இருந்தும் பிடித்துவரப்பட்ட அடிமைகளையும் கட்டுமானப் பொருட்களையும் எகிப்திற்கு கொண்டுவரும் பொருட்டு முதன்முதலில் கப்பல்கள் கட்டப்பட்டன.

அதன் அடிப்படையில் சிடர் மரத்தை கொண்டு கட்டப்பட்ட சுமார் ஐம்பது மீட்டர் நீளமுள்ள கப்பல் தான் உலகின் முதல் கப்பல் என வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இது கட்டப்பட்ட வருடம் கிமு 2613. இந்த உலகின் முதல் கப்பலுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் இட்ட பெயர் 'Praise of the Two Lands'. சிகப்பு பிரமிடை கட்டிய லிபிய மற்றும் நுபிய அடிமைகளின் நினைவாக இந்தப் பெயரை வைத்திருக்கலாம் என நம்புகிறேன்.

இதே காலக்கட்டத்தில் வாழ்ந்த இலங்கை மன்னன் ராவணன் கிழக்கே பசுபிக் சமுத்திரத்தை தாண்டி தென்னமேரிக்க நாடுகள் வரை வணிகத்தொடர்பு கொண்டிருந்ததாகவும் மாயன் இளவரசி ஒருத்தியை மனம் முடித்து இலங்கை அழைத்து வந்ததாகவும் கதைகள் உள்ளன. இவைகள் கதை அளவிலேயே உள்ளன. முழுவதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இதற்கு அடுத்த ஆயிரம் வருடங்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் மேற்கே மடகாஸ்கர் மற்றும் அரேபியா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை வணிகத்தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பிற்காலங்களில்  அவர்கள் மேலும் மேற்கு ஆப்ரிக்காவின் கானா முதல் பசிபிக் அமேரிக்காவின் மேற்கு கரை வரை சென்றதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தான் கடல்வழி அறிவை கொண்டிருந்த உலகின் முதன்மக்கள். அதன் பிறகு கப்பல் மாலுமிகளால் உலகின் பல நாடுகள் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பல நூற்றாண்டுகள்  அவர்களாலேயே ஆளப்பட்டது என்பது வரலாறு.

இன்று உலகம் முழுவதும் 55000 கப்பல்களும் 11 லட்சம் மாலுமிகளும் உள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டும் சுமார் 2.5 லட்சம் பேர். உலகின் 90 சதவிகித சரக்கு போக்குவரத்து கடல்வழியே கப்பல்கள் மூலமாக தான் நடைபெறுகிறது. வருடத்திற்கு சுமார் 15 பில்லியன் டன் சரக்குகள் கப்பல்களில் கையாளப்படுகின்றன. உலகப் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் கப்பல் போக்குவரத்து தான் முதல் பெரும் பங்கை வகிக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் துறை பற்றி வெளி உலகத்திற்கு அதிகம் அறியப்படாத சூழலில் 2010இல் லண்டனில் International Maritime Organization ஒவ்வொரு வருடமும் ஜீன் 25ஆம் தேதியை உலக கடலோடிகள் தினமாக (world seafarer's day) அறிவித்தது. பொது சமூகத்திற்கும் உலக மக்களுக்கும் கடலோடிகளை பற்றிய செய்திகளையும் வரலாற்றையும் தெரிந்து கொள்வதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்காகவும் இந்த ஒரு நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்படி 2011இல் இருந்து இந்தநாள் உலக கடலோடிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கப்பலில் ஒரு மாலுமி அதிகபட்சம் 11 மாதங்கள் வரை தான் பணியில் இருக்க முடியும் என்கிற ஒரு சர்வேதச விதிமுறை உள்ளது. அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது தான் காரணம். இதைக் கவனத்தில் கொண்டு தான் கப்பலில் மாலுமிகளின் நலனுக்காக பல்வேறு வசதிகள் செய்துதரப் பட்டிருக்கும். இன்று கரோனா காலகட்டத்தில் சுமார் 7 லட்சம் மாலுமிகள் தங்கள் வேலைக்கான கால அளவு முடிந்தும் தரையில் இறங்க முடியாமலும், சொந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் செல்ல முடியாமலும் பல மாதங்களாக கடலிலேயே கப்பலிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். இதோடு கப்பல்களும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த கடினமான சூழல் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை. அதுவரை அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் வலிமையோடு இருக்க வேண்டும் என இந்த நாளில் அவர்களை நினைவு கூறுவோம்.